நெல்லை மாவட்டத்தில் பள்ளிகளை ஆய்வு செய்ய 16 குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளது - கலெக்டர் விஷ்ணு தகவல்
நெல்லை மாவட்டத்தில் பள்ளிகளை ஆய்வு செய்ய 16 குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளதாக அம்மாவட்ட கலெக்டர் விஷ்ணு தெரிவித்துள்ளார்.
நெல்லை,
நெல்லை சாப்டர் மேல்நிலைப்பள்ளியில் நேற்று கழிவறை கட்டிட சுவர் இடிந்து விழுந்ததில் 3 மாணவர்கள் பரிதாபமாக இறந்தனர். மேலும் 4 பேர் காயமடைந்தனர். காயமடைந்த 4 பேரும் சிகிச்சைக்காக பாளையங்கோட்டை ஐகிரவுண்டு அரசு ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர்.
இதுகுறித்து தகவலறிந்த நெல்லை மாவட்ட கலெக்டர் விஷ்ணு ஆஸ்பத்திரிக்கு சென்று அங்கு சிகிச்சை பெற்று வரும் மாணவர்களை நேரில் சந்தித்து உடல்நலம் விசாரித்து ஆறுதல் கூறினார். அப்போது ஆஸ்பத்திரி டீன் ரவிச்சந்திரன் மற்றும் டாக்டர்களிடம் தரமான சிகிச்சை அளிக்கும்படி கூறினார். உயிரிழந்த மாணவர்களின் குடும்பத்தினருக்கும் ஆறுதல் கூறினார்.
இதைத்தொடர்ந்து கலெக்டர் விஷ்ணு செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டியில், “நெல்லை மாவட்டத்தில் பள்ளிகளை ஆய்வு செய்ய 16 குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளது. தேவைப்பட்டால் கூடுதல் குழுக்கள் அமைக்கப்படும், 4 பேர் கொண்ட குழுவில் பொறியாளர் ஒருவரும் இடம்பெறுவார்” ” என்று அவர் தெரிவித்தார்.
முன்னதாக பள்ளி கழிவறை கட்டிட சுற்றுச்சுவர் இடிந்த விபத்து குறித்து பொதுப்பணித்துறை மூலம் முதற்கட்டமாக ஆய்வு நடத்தினோம் என்றும் அதில் கட்டிட சுற்றுச்சுவர் அடித்தளம் அமைக்காமல் கட்டப்பட்டுள்ளது தெரிய வந்துள்ளது என்றும் இறுதிக்கட்ட ஆய்வின் முடிவில் உரிய நடவடிக்கை எடுக்கப்படும். மேலும் சிறப்பு குழு அமைத்து 2 நாட்களில் மாவட்டத்தில் உள்ள அனைத்து பள்ளிக்கட்டிடங்களின் உறுதித்தன்மை குறித்து ஆய்வு செய்யப்படும் என்று கலெக்டர் விஷ்ணு தெரிவித்திருந்தார்.