சமூக வலைதளத்தில் அவதூறு பரப்புவோர் மீது நடவடிக்கை
முதல்-அமைச்சர் ரங்கசாமி குறித்து சமூக வலைதளத்தில் அவதூறு பரப்புவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என சீனியர் போலீஸ் சூப்பிரண்டிடம், என்.ஆர்.காங்கிரஸ் எம்.எல்.ஏ.க்கள் புகார் அளித்துள்ளனர்.
முதல்-அமைச்சர் ரங்கசாமி குறித்து சமூக வலைதளத்தில் அவதூறு பரப்புவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என சீனியர் போலீஸ் சூப்பிரண்டிடம், என்.ஆர்.காங்கிரஸ் எம்.எல்.ஏ.க்கள் புகார் அளித்துள்ளனர்.
பரபரப்பு ஆடியோ
புதுச்சேரியில் மழை நிவாரணமாக அனைத்து ரேஷன்கார்டுகளுக்கும் ரூ.5 ஆயிரம் வழங்கப்படும் என்று முதல்-அமைச்சர் அறிவித்தார். ஆனால் இதுவரை நிவாரணத்தொகை வழங்கப்படவில்லை.
இந்தநிலையில் முதல்-அமைச்சர் ரங்கசாமியின் செல்போன் எண்ணில் தொடர்பு கொண்டு பேசியவர் காரைக்காலில் இருந்து பேசுவதாக அறிமுகமானார். தொடர்ந்து மழை நிவாரணம் ரூ.5 ஆயிரம் எப்போது வழங்கப்படும் என அவர் கேள்வி எழுப்பினார்.
அதற்கு முதல்-அமைச்சர் ரங்கசாமி, நான் மட்டும் ராஜா இல்லை. எனக்கு கீழே அமைச்சர்களும், மேலே சிலரும் உள்ளனர் என கூறியிருந்தார். இந்த ஆடியோ சமூக வலைதளத்தில் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியது.
போலீசில் புகார்
இதுதொடர்பாக சட்டம்-ஒழுங்கு சீனியர் போலீஸ் சூப்பிரண்டு அலுவலகத்தில் சீனியர் போலீஸ் சூப்பிரண்டு லோகேஷ்வரனிடம், என்.ஆர்.காங்கிரஸ் கட்சியின் எம்.எல்.ஏ.க்கள் பாஸ்கரன், ஏ.கே.டி. ஆறுமுகம், லட்சுமிகாந்தன், கே.எஸ்.பி.ரமேஷ் ஆகியோர் ஒரு புகார் அளித்தனர். அதில் முதல்-அமைச்சர் ரங்கசாமி பேசிய ஆடியோ சமூக வலைதளத்தில் அவதூறு பரப்பும் வகையில் பகிரப்பட்டு வருகிறது.
இதுகுறித்து உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என தெரிவித்தனர். இதுதொடர்பாக நடவடிக்கை எடுப்பதாக சீனியர் போலீஸ் சூப்பிரண்டு லோகேஷ்வரன் உறுதி அளித்தார்.
மிரட்டல்
இந்தநிலையில் மற்றொரு ஆடியோ சமூக வலைதளத்தில் பரவி வருகிறது. அதில் முதல்-அமைச்சரிடம் நிவாரணம் கேட்டு பேசிய நபரை தொடர்பு கொண்டு ஒருவர் பேசுகிறார்.
அவர், முதல்-அமைச்சர் இல்லத்தில் இருந்து சங்கர் பேசுவதாக அறிமுகம் செய்து கொண்டு முதல்-அமைச்சர் உரையாடலை சமூக வலைதளத்தில் பதிவிட்டதற்கு எதிர்ப்பு தெரிவித்து தொலைத்துவிடுவதாக மிரட்டுகிறார்.
இந்த ஆடியோவும் தற்போது வைரலாகி வருகிறது.