பாலூர் ரயில் நிலையத்தில் பொதுமக்கள் ரயில் மறியல் போராட்டம்
சென்னை கடற்கரை-அரக்கோணம் இடையிலான ரயில்கள் தினமும் காலதாமதமாக இயக்கப்படுவதாக பயணிகள் ரயில் மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
சென்னை,
சென்னை கடற்கரையில் இருந்து செங்கல்பட்டு வழியாக திருமால்பூர், அரக்கோணம், காஞ்சிபுரம் உள்ளிட்ட பகுதிகளுக்கு தினமும் மின்சார ரெயில்கள் இயக்கப்பட்டு வருகின்றன. இந்த மின்சார ரெயில்களில் காஞ்சிபுரம், செங்கல்பட்டு, ராணிப்பேட்டை ஆகிய மாவட்டங்களில் இருந்து தினந்தோறும் ஆயிரக்கணக்கான மக்கள் சென்னைக்கு வேலைக்காகவும், பள்ளி, கல்லூரிகளுக்கும் சென்று வருகின்றனர்.
இந்த நிலையில் சென்னை கடற்கரையில் இருந்து இன்று மாலை 6 மணிக்கு புறப்பட்ட அரக்கோணம் செல்லும் ரெயிலானது, காலதாமதமாக சென்றுள்ளது. இதன் காரணமாக செங்கல்பட்டு அருகே பாலூர் ரெயில் நிலையத்தில் பொதுமக்கள் தண்டவாளத்தில் இறங்கி ரெயில் மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் அரக்கோணம் வழித்தடத்தில் மின்சார ரெயில்கள் தொடர்ந்து தாமதமாக இயக்கப்பட்டு வருவதாக குற்றம் சாட்டினர்.
இதன் காரணமாக செங்கல்பட்டை தாண்டி தென் மாவட்டங்களுக்குச் செல்லும் அனைத்து ரெயில்களும் ஆங்காங்கே நிறுத்தி வைக்கப்பட்டன. குறிப்பாக சிலம்பு, பொதிகை, பாண்டியன், முத்துநகர், சேது எக்ஸ்பிரஸ் ஆகிய ரெயில்கள் தற்போது மறைமலைநகர், சிங்கப்பெருமாள் கோவில், கூடுவாஞ்சேரி, தாம்பரம் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் நிறுத்தி வைக்கப்பட்டன.
போராட்டத்தில் ஈடுபட்ட மக்களிடம் ரெயில்வே போலீசார் மற்றும் ரெயில்வேத்துறை அதிகாரிகள் பேச்சுவார்த்தை நடத்தினர். இதைத் தொடர்ந்து சுமார் 2 மணி நேரத்திற்கும் மேலாக நீடித்த போராட்டம் திரும்ப பெறப்பட்டது. இதையடுத்து தென் மாவட்டங்களுக்குச் செல்லும் அனைத்து ரெயில்களும் தாமதமாக புறப்பட்டுச் சென்றன.