லஞ்ச ஒழிப்பு துறையினர் சட்டையை கழற்றுவோம்; சி.வி. சண்முகம் பகிரங்க எச்சரிக்கை
லஞ்ச ஒழிப்பு துறையினர் சட்டையை கழற்றுவோம் என அ.தி.மு.க. முன்னாள் அமைச்சர் சி.வி. சண்முகம் பகிரங்க எச்சரிக்கை விடுத்துள்ளார்.
விழுப்புரம்,
தேர்தல் வாக்குறுதிகளை தி.மு.க. அரசு நிறைவேற்ற கோரி தமிழ்நாடு முழுவதும் இன்று அ.தி.மு.க.வினர் கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். இதில், விழுப்புரத்தில் அ.தி.மு.க. முன்னாள் அமைச்சர் சி.வி. சண்முகம் தலைமையில் ஆர்ப்பாட்டம் நடந்தது.
இந்த ஆர்ப்பாட்டத்திற்கு தலைமையேற்று பேசிய அவர், ஆட்சி மாற்றம் வந்தவுடன் நாங்களும் புதிய ஸ்கிரிப்ட் எழுதி இதே லஞ்ச ஒழிப்புத்துறையை வைத்தே லஞ்ச ஒழிப்புத்துறை அதிகாரிகளின் சட்டையை கழற்றுவோம் என பகிரங்க எச்சரிக்கை விடுத்துள்ளார்.
5 ஆண்டு காலம் கழித்து அ.தி.மு.க.வின் ஆட்சி மீண்டும் வரும். நிச்சயம் வரும். ஆளும் தி.மு.க.வின் ஸ்டாலின் பேச்சை கேட்டு ஆடி கொண்டிருக்கும் லஞ்ச ஒழிப்பு துறைக்கு ஒன்றை கூறி கொள்கிறோம். ஆட்சி நிரந்தரமில்லை. அதிகாரிகள், காவல் துறையை எச்சரிக்கிறோம்.
நாங்களும் புதிய ஸ்கிரிப்ட் எழுதுவோம். புதிய காட்சிகளை வைப்போம். இதே லஞ்ச ஒழிப்பு துறையை வைத்தே, லஞ்ச ஒழிப்பு துறை அதிகாரிகளின் சட்டையை கழற்றுவோம் என பகிரங்க எச்சரிக்கை விடுத்துள்ளார்.
இன்றைக்கு லஞ்ச ஒழிப்பு துறையில் உள்ள அதிகாரிகள் மற்றும் உயரதிகாரிகள் அனைவரும் லஞ்சம் வாங்காதவர்களா? என்றும் அவர் கேள்வி எழுப்பியுள்ளார்.
ஒரே நாடு, ஒரே தேர்தல் திட்டம் வந்தால் தி.மு.க. ஆட்சியில் நீடிக்காது என எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி கூறி உள்ள நிலையில், லஞ்ச ஒழிப்பு துறையினருக்கு அ.தி.மு.க. முன்னாள் அமைச்சர் சி.வி. சண்முகம் பகிரங்க எச்சரிக்கை விடுத்துள்ளார்.