லஞ்சம் வாங்கிய கிராம நிர்வாக அதிகாரிக்கு 2 ஆண்டுகள் சிறை

லஞ்சம் வாங்கிய கிராம நிர்வாக அதிகாரிக்கு 2 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து கரூர் நீதிமன்றம் தீர்ப்பு அளித்தது.

Update: 2021-12-16 18:43 GMT
கரூர், 
கிராம நிர்வாக அதிகாரி
கரூர் அருகே உள்ள வெடிக்காரன்பட்டியை சேர்ந்தவர் முருகேசன். இவர் தனக்கு சொந்தமான நிலத்தை அளந்து சரி செய்து தர வலியுறுத்தி கடந்த 2009-ம் ஆண்டு மார்ச் மாதம் புலியூர் பகுதியை சேர்ந்த கிராம நிர்வாக அதிகாரி சீனிவாசனிடம் கூறியுள்ளார்.
இதற்கு அவர் ரூ.5 ஆயிரம் லஞ்சம் கேட்டதாக தெரிகிறது. ஆனால் லஞ்சம் கொடுக்க மனமில்லாத முருகேசன் இதுகுறித்து திருச்சி லஞ்ச ஒழிப்பு போலீசாருக்கு தகவல் கொடுத்துள்ளார்.
2 ஆண்டுகள் சிறை
இதனைதொடர்ந்து லஞ்ச ஒழிப்பு போலீசார் ரசாயனம் தடவிய ரூபாய் நோட்டுகளை சீனிவாசனிடம் கொடுக்குமாறு முருகேசனிடம் கூறினர். அதன்பேரில் அவர் ரூபாய் நோட்டுகளை கொடுத்தபோது சீனிவாசனை கையும் களவுமாக லஞ்ச ஒழிப்பு போலீசார் பிடித்தனர். மேலும், அவர் மீது 2 பிரிவுகளில் வழக்குப்பதிவு செய்யப்பட்டது.
இந்த வழக்கின் விசாரணை கரூர் நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது. இதற்கான தீர்ப்பு நேற்று தலைமை குற்றவியல் நடுவர் நீதிமன்ற நீதிபதி ராஜலிங்கம் வழங்கினார். அதில் ஒவ்வொரு பிரிவிற்கும் 2 ஆண்டுகள் சிறை தண்டனை என 4 ஆண்டுகள் சிறை தண்டனையும், ஒவ்வொரு பிரிவிற்கும் ரூ.20 ஆயிரம் அபராதம் என மொத்தம் ரூ.40 ஆயிரம் அபராதம் விதித்தார். மேலும், இந்த தண்டனையை ஏக காலத்தில் அனுபவிக்க வேண்டும் என உத்தரவிட்டார்.
மேலும், அபராதத்தை கட்டத்தவறினால் ஒவ்வொரு பிரிவிற்கும் 6 மாதம் சிறை தண்டனை என ஓராண்டு சிறை தண்டனை அனுபவிக்க வேண்டும் என நீதிபதி தனது தீர்ப்பில் கூறினார்.

மேலும் செய்திகள்