பணியிடை நீக்கம் உத்தரவு ரத்து: பள்ளிக்கு வந்த ஆசிரியருக்கு கிராம மக்கள் உற்சாக வரவேற்பு
பணியிடை நீக்கம் உத்தரவு ரத்து செய்யப்பட்டதால் மீண்டும் பள்ளிக்கு வந்த ஆசிரியருக்கு மாலை அணிவித்து கிராம மக்கள் உற்சாக வரவேற்பு அளித்தனர்.
வெள்ளியணை,
ஆசிரியர் பணியிடை நீக்கம்
கரூர் மாவட்டம் வெள்ளியணை அருகே உள்ள பாகநத்தம் அரசு நடுநிலைப்பள்ளியில் அறிவியல் ஆசிரியராக பணிபுரிந்து வந்தவர் பன்னீர்செல்வம் (வயது 48). இவர் பாலியல் உணர்வை தூண்டும் வகையில் மாணவர்களுக்கு பாடம் நடத்தியதாக எழுந்த புகாரின் பேரில் கடந்த 1-ந் தேதி பணியிடை நீக்கம் செய்யப்பட்டார்.
இதற்கு எதிர்ப்பு தெரிவித்து மாணவர்களின் பெற்றோர் மற்றும் கிராம மக்கள் பள்ளியை முற்றுகையிட்டு போராட்டம் நடத்தினர். இதையடுத்து பள்ளிக்கு வந்த கல்வித்துறை அதிகாரிகளிடம் ஆசிரியரின் பணியிடை நீக்கத்தை ரத்து செய்ய வேண்டும். அவரை அதே பள்ளியில் பணியமர்த்த வேண்டும் என கோரிக்கை வைத்தனர். மேலும் இது குறித்து மாவட்ட கலெக்டரிடம் மனு அளிக்கப்பட்டது.
உத்தரவு ரத்து
இதேபோல் தமிழ்நாடு ஆசிரியர் கூட்டணியின் மாவட்ட நிர்வாகிகள் ஆசிரியரின் பணியிடை நீக்கத்தை ரத்து செய்ய வலியுறுத்தி போராட்டம் அறிவித்தனர். இதையடுத்து வட்டார கல்வி அலுவலர்கள் மீனா, சித்ரா ஆகியோர் இதுகுறித்து விசாரணை நடத்தி அறிக்கை அளிக்க முதன்மை கல்வி அலுவலர் உத்தரவிட்டார்.
இதனைதொடர்ந்து அவர்கள் அளித்த அறிக்கையின் பேரில் ஆசிரியர் பன்னீர்செல்வத்தை பணியிடை நீக்கம் செய்த உத்தரவை ரத்து செய்து, அவர் அதேபள்ளியில் ஆசிரியராக மீண்டும் பணி புரிவதற்கான ஆணையினை மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் விஜயேந்திரன் வழங்கினார்.
உற்சாக வரவேற்பு
இதை பெற்றுக்கொண்டு, ஆசிரியர் கூட்டமைப்பு நிர்வாகிகளுடன் பள்ளிக்கு வந்த ஆசிரியர் பன்னீர்செல்வத்தை பள்ளிக்கு வெளியே கிராம மக்கள் உற்சாகத்துடன் வரவேற்று மாலை அணிவித்து பள்ளிக்குள் அழைத்து சென்றனர். பின்னர் தலைமை ஆசிரியர் (பொறுப்பு) பால்ராஜ் உதயகுமாரிடம் பணியிடை நீக்கம் ரத்து செய்யப்பட்டு பணி ஆணை வழங்கப்பட்ட உத்தரவை கொடுத்து வருகைப்பதிவேட்டில் கையெழுத்திட்டு பணியில் சேர்ந்தார்.
அதனை தொடர்ந்து வகுப்பறைக்கு சென்ற ஆசிரியர் பன்னீர்செல்வத்தை மாணவர்கள் உற்சாகத்துடன் கைத்தட்டி வரவேற்றனர்.