தமிழகத்தில் மேலும் 4 பேருக்கு ஒமைக்ரானுக்கு முந்தைய அறிகுறி - ராதாகிருஷ்ணன் தகவல்
தமிழகத்தில் மேலும் 4 பேருக்கு ஒமைக்ரானுக்கு முந்திய அறிகுறி கண்டறியப்பட்டுள்ளதாக மருத்துவத்துறை செயலாளர் ராதா கிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.
சென்னை,
சென்னை கிண்டியில் செய்தியாளர்களைச் சந்தித்த தமிழ்நாடு மருத்துவத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன், “தமிழகத்தில் மேலும் 4 பேருக்கு ஒமைக்ரானுக்கு முந்தைய அறிகுறி இருக்கலாம் என சந்தேகிக்கப்படுகிறது. நேற்று ஒமைக்ரான் தோற்று உறுதி செய்யப்பட்ட நபருடன் பயணித்த பயணியுடன் தொடர்பில் இருந்த 4 பேருக்கு மரபணு மாற்று தொற்று இருப்பது கண்டறியப்பட்டுள்ளது. அவர் சென்ற மார்க்கெட், திருமணம், இறந்த வீடு உள்ளிட்ட பகுதிகளில் 219 நபர்களுக்கு சோதனை மேற்கொள்ளப்பட்டுள்ளது. ஒரே இடத்திலிருந்து 11 பேருக்கு கொரோனா பரவியுள்ளது. ஒமைக்ரான் உறுதி செய்யப்பட்டவர், மாற்றமடைந்த கொரோனா உறுதியானவர்கள் ஆகியோருக்கு லேசான பாதிப்பு உள்ளது.
இந்த நேரத்தில் கிங்ஸ் மருத்துவமனையில், ஒமைக்ரான் தொற்று உள்ளவர் உட்பட 13 நபர்கள் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டு உள்ளனர். தொற்றுக்கு ஆளானவர்களில் 16 வயது ஆண் தவிர்த்து அனைவரும் இரண்டு டோஸ் தடுப்பூசி போட்டுக்கொண்டுள்ளனர். ஒமைக்ரான் அச்சுறுத்தல் காரணமாக 15 நாடுகளில் இருந்து வந்த 12,513 பேருக்கு சோதனை மேற்கொள்ளப்பட்டுள்ளது. மரபணு மாற்றமடைந்த கொரோனா உறுதியானவர்களுடன் தொடர்பில் இருந்தவர்களைக் கண்டறியும் பணி நடைபெற்று வருகிறது” என்று அவர் கூறினார்.