உர உதவி மையம் தொடங்கப்பட்டிருப்பது வெறும் கண்துடைப்பு - ஓ.பன்னீர்செல்வம்
பொட்டாஷ் உரம் தாராளமாக விரைந்து கிடைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அ.தி.மு.க. ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம் வலியுறுத்தி உள்ளார்.
சென்னை,
அ.தி.மு.க. ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-
தமிழ்நாடு அரசு சார்பில் வெளியிடப்பட்ட செய்திக்குறிப்பில், ‘ஏற்கனவே இருப்பில் உள்ள 18,600 மெட்ரிக் டன் பொட்டாஷ் ரூ.1.,040-க்கு விற்பனை செய்யப்பட்டு வருவதாகவும், புதிதாக வந்துள்ள பொட்டாஷ் உரம் ஒரு மூட்டை ரூ.1,700-க்கு விற்பனை செய்யப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டு உள்ளது. இருப்பினும் உண்மை நிலை வேறாக இருக்கிறது என்றும், இருப்பில் உள்ள பொட்டாஷ் உரத்தை 700 ரூபாய் கூடுதலாக விலை வைத்து வியாபாரிகள் விற்பனை செய்வதாகவும், தொடக்க வேளாண் கூட்டுறவு கடன் சங்கங்களில் இருப்பு இல்லை என்ற நிலைமை தொடர்வதாகவும் கூறப்படுகிறது.
மேலும் உரிய காலத்தில் உரங்களை பயன்படுத்தினால் தான் அது உரிய பயனை விவசாயிகளுக்கு அளிக்கும் என்ற சூழ்நிலையில் நேற்று தான் தூத்துக்குடி துறைமுகத்துக்கு உரங்கள் வந்துள்ளன என்று கூறுவது காலம் தாழ்ந்த நடவடிக்கை என்றும் இந்த உரம் அந்தந்த மாவட்டங்களுக்கு சென்று சேர மேலும் தாமதமாகும் என்றும், விவசாயிகள் புகார் தெரிவிக்க மாநில உர உதவி மையம் தொடங்கப்பட்டிருப்பதாக தெரிவித்து இருப்பது கண்துடைப்பு என்றும் கூறப்படுகிறது.
இதில் இருந்து வேளாண் உற்பத்தியை பெருக்கும் வகையில் விவசாயிகளுக்கு தேவையான உரங்களையும், இடுபொருட்களையும் உரிய காலத்தில் நியாயமான விலையில் வழங்க அரசு தவறிவிட்டது என்பது தெளிவாகிறது. அரசின் மெத்தன போக்கிற்கு எனது கடும் கண்டனத்தை தெரிவித்துக் கொள்கிறேன்.
வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு பயிர்கள் பாதிக்கப்பட்டுள்ள தற்போதைய நிலையையும், உரத்தின் இருப்பை முன்கூட்டியே அரசுஉறுதி செய்யாததையும் கருத்தில் கொண்டு பொட்டாஷ் உரம் பழைய விலைக்கே அதாவது ஒரு மூட்டை ரூ.1,040 என்ற விலைக்கு தொடக்க வேளான் கூட்டுறவு கடன் சங்கங்கள் மூலம் விற்பனை செய்யப்பட வேண்டும் என்ற எதிர்பார்ப்பு விவசாயிகளிடம் உள்ளது.
எனவே முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் தலையிட்டு பொட்டாஷ் உரத் தட்டுப்பாட்டினை நீக்கி விவசாயிகளுக்கு முந்தைய விலையில், அதாவது ஒரு மூட்டை ரூ.1040 என்ற விலையில் பொட்டாஷ் உரம் தாராளமாக விரைந்து கிடைக்க ஆவன செய்ய வேண்டும்.
இவ்வாறு அவர் கூறி உள்ளார்.