ஹூஸ்டன் பல்கலைக்கழக தமிழ் இருக்கை; ‘தமிழ் செயலி’ தொடக்கம்!
ஹூஸ்டன் தமிழ் இருக்கையின் செயலியை அமைச்சர் மனோ தங்கராஜ் தொடங்கி வைத்தார்.
சென்னை,
அமெரிக்காவின் டெக்சாஸ் மாகாணம் ஹூஸ்டன் மாநகரில் அமைந்துள்ள ஹூஸ்டன் பல்கலைக்கழகத்தில் தமிழ் இருக்கை நிறுவ அனுமதி வழங்கப்பட்டு உள்ளது. இதற்காக சாம் கண்ணப்பன் தலைமையில், ரூ.15 கோடி மதிப்பிலான நிதி திரட்டும் பணிகள் கடந்த சில வருடங்களாக மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இதன் ஒரு அங்கமாக தமிழ் இருக்கை குறித்த தகவல்கள் அடங்கிய தமிழ் செயலி உருவாக்கப்பட்டு உள்ளது.
வி.ஜி.பி. உலக தமிழ்ச்சங்கத்தின் தலைவரும், தமிழ் இருக்கையின் இந்திய ஆலோசகருமான வி.ஜி.சந்தோசம் தலைமையில் நேற்று நடந்த விழாவில், தகவல் தொழில்நுட்பத்துறை அமைச்சர் மனோ தங்கராஜ், ஹூஸ்டன் தமிழ் இருக்கையின் செயலியை தொடங்கி வைத்தார். இந்த செயலியின் மூலமாக ஹூஸ்டன் தமிழ் இருக்கைக்கு நிதி திரட்டுவதற்கான வசதி ஏற்படுத்தப்பட்டு உள்ளது.
ஹூஸ்டன் தமிழ் இருக்கையின் செயலி மூலமாக பழமைவாய்ந்த தமிழை ஆய்வு செய்வதற்கும், தமிழறிஞர்களை ஊக்குவிப்பதற்காகவும், தமிழ் மொழியை வளர்ச்சி அடைவதற்குமான ஏற்பாடுகள் செய்யப்பட்டு உள்ளன.
விழாவில், வி.ஜி.சந்தோசம் பேசும்போது, ‘‘ஹூஸ்டன் தமிழ் இருக்கைக்கு ரிசர்வ் வங்கியின் அனுமதியுடன் ரூ.10 ஆயிரம் அமெரிக்க டாலரை நன்கொடையாக வழங்குகிறேன்’’ என்றார்.
அமைச்சர் மனோ தங்கராஜ் பேசுகையில், ‘‘மறைந்த முன்னாள் முதல்-அமைச்சர் கருணாநிதியும், முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலினும் தமிழ் மொழியின் வளர்ச்சிக்கு பெரும் உதவியாக எப்போதும் இருந்து வருகிறார்கள்’’ என்றார்.
இந்த விழாவில், வட அமெரிக்க தமிழ்ச்சங்க பேரவையின் தலைவர் கால்டுவெல் வேல்நம்பி, ராம் சுகந்தன் வாழப்பாடியார், நடிகர் ஆரி, திரைப்பட பாடகி ஏ.ஆர்.ரெஹானா, பட்டிமன்ற பேச்சாளர் பாரதி மற்றும் பல்வேறு தமிழ் அறிஞர்கள் கலந்துகொண்டனர்.