பிஆர்டிசிக்கு புதிதாக 200 பஸ்கள் வாங்கப்படும்

பொங்கல் பண்டிகைக்கு ஆதிதிராவிட மக்களுக்கு இலவச வேட்டி, சேலை வழங்கப்படும். பி.ஆர்.டி.சி.க்கு புதிதாக 200 பஸ்கள் வாங்கப்படும் என்று அமைச்சர் சந்திர பிரியங்கா கூறினார்.

Update: 2021-12-13 18:29 GMT
பொங்கல் பண்டிகைக்கு ஆதிதிராவிட மக்களுக்கு இலவச வேட்டி, சேலை வழங்கப்படும். பி.ஆர்.டி.சி.க்கு புதிதாக 200 பஸ்கள் வாங்கப்படும் என்று அமைச்சர் சந்திர பிரியங்கா கூறினார்.
புதுச்சேரி போக்குவரத்துத்துறை அமைச்சர் சந்திர பிரியங்கா சட்டசபை வளாகத்தில் நேற்று நிருபர்களிடம் கூறியதாவது:-
200 புதிய பஸ்கள்
சட்டமன்றத்தில் அறிவித்த படி பெண்கள் ஓட்டுனர் உரிமம் பெற சனிக்கிழமைகளில் சிறப்பு முகாம் நடத்தப்பட்டு வருகிறது. இதற்கு பெண்கள் மத்தியில் நல்ல வரவேற்பு உள்ளது.
புதுவை அரசு சாலை போக்குவரத்து கழகத்திற்கு (பி.ஆர்.டி.சி.) புதிதாக 200 பஸ்கள் மத்திய அரசின் மூலம் வாங்க நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இதில் மத்திய அரசின் நிர்பயா திட்டத்தின் கீழ் பெண்களுக்கு தனியாக பஸ்கள் இயக்கப்படும். இதில் ஜி.பி.எஸ், கண்காணிப்பு கேமரா உள்ளிட்ட பல்வேறு வசதிகள் செய்ய வேண்டும்.
வால்வோ பஸ்கள்
போக்குவரத்து கழகத்தில் 164 பஸ்கள் உள்ளன. இதில் 90 பஸ்கள் மட்டுமே தற்போது இயக்கப்படுகிறன. மேலும் 10 வால்வோ பஸ்கள் இயக்க முடியாத நிலையில் உள்ளன. அதனை சரி செய்ய சம்பந்தப்பட்ட பஸ் நிறுவனத்தினரை அணுகியுள்ளோம். ஆனால் சீரமைக்க அதிக செலவு ஏற்பட்டால் பழைய பஸ்களை அந்த நிறுவனத்திடம் கொடுத்து விட்டு புதிய பஸ்கள் வாங்க நடவடிக்கை எடுக்கப்படும்.
பி.ஆர்.டி.சி.யில் டிக்கெட் பரிசோதகர்கள் எண்ணிக்கை குறைவாக உள்ளது. எனவே தமிழக அரசு பஸ் டிக்கெட் பரிசோதகர்கள் மூலமாகவும் புதுவை பஸ்களை பரிசோதிக்க அனுமதி பெற்றுள்ளோம். இதன் காரணமாக பி.ஆர்.டி.சி.யின் நாள் வருமானம் முன்பை விட 2 மடங்கு அதிகரித்துள்ளது. பி.ஆர்.டி.சி.யை மீண்டும் லாபத்தில் இயக்க நடவடிக்கை எடுக்கப்படும். 
சாலை போக்குவரத்து கழகத்தில் எலெக்ட்ரிக் பஸ்களுக்கு முன்னுரிமை  அளிக்கப்படும். இதற்காக குறைந்த தூரம் செல்லும் பஸ்கள் மின்சார பஸ்களாக மாற்ற நடவடிக்கை எடுக்கப்படும்.
இலவச துணிகள்
புதுவையில் அமைப்பு சாரா தொழிலாளர்களின் விவரங்கள் இ-ஷ்ரம் என்ற தேசிய வலைதளத்தில் பதிவேற்றம் செய்யப்பட உள்ளது. இதற்காக 21 இடங்களில் முகாம்கள் நடத்தப்படும். ஆதிதிராவிடர் நலத்துறையில் தற்போது பல்வேறு திட்டங்கள் செயல்படுத்தப்படுகிறது. மாணவர்களின் கல்விக்கடன் சம்பந்தப்பட்ட கல்வி நிறுவனங்களுக்கு செலுத்தப்பட்டுள்ளது. பிரதம மந்திரியின் வீடு கட்டும் திட்டத்தில் 400 பயனாளிகளை கூடுதலாக சேர்க்க மத்திய அரசிடம் இருந்து ஒப்புதல் பெறப்பட்டுள்ளது.
தீபாவளி பண்டிகைக்கு இலவச வேட்டி, சட்டைக்கு பதிலாக பணம் வழங்கப்பட்டது. பொங்கல் பண்டிகைக்கு ஆதி திராவிட மக்களுக்கு இலவச வேட்டி, சேலை வழங்க நடவடிக்கை எடுக்கப்படும்.
இந்த ஆடைகள் பாண்டெக்ஸ், பாண்பேப் நிறுவனங்களில் கொள்முதல் செய்யப்படும். ஆதிதிராவிட மக்கள் வசிக்கும் பகுதிகளில் பொது சேவை மையங்கள் தொடங்கப்பட்டு அரசின் சேவைகளை எளிதாக பெற வசதி செய்யப்பட்டுள்ளது. 
புதிய படிப்புகள்
வீட்டு வசதி வாரிய ஊழியர்களுக்கு 2 மாத சம்பளம் வழங்கப்பட்டுள்ளது. வீட்டு வசதி வாரியத்திற்கு சொந்தமான இடங்களில் புதிய கட்டிடங்கள் கட்டி வணிக ரீதியான பயன்பாட்டிற்கு கொண்டு வரப்படும்.
பாரதியார் பல்கலைக்கழகத்தில் பல புதிய படிப்புகளை தொடங்க பல்கலைக்கழகத்திடம் ஒப்புதல் பெறப்பட்டுள்ளது. புதுவையில் உள்ள நூலகங்கள் டிஜிட்டல் மயமாக்க நடவடிக்கை எடுக்கப்படும்.
இவ்வாறு அவர் கூறினார்.

மேலும் செய்திகள்