ஒருவருக்கும் ஒமைக்ரான் தொற்று இல்லை
புதுச்சேரியில் இதுவரை ஒருவருக்கும் ஒமைக்ரான் தொற்று இல்லை என கவர்னர் தமிழிசை சவுந்தரராஜன் தெரிவித்தார்
புதுச்சேரியில் இதுவரை ஒருவருக்கும் ஒமைக்ரான் தொற்று இல்லை என கவர்னர் தமிழிசை சவுந்தரராஜன் தெரிவித்தார்.
தேசிய டயாலிசிஸ் திட்டம்
பிரதமரின் தேசிய டயாலிசிஸ் திட்டத்தை புதுச்சேரி அரசு ஆஸ்பத்திரிகளில் செயல்படுத்துவது தொடர்பான ஆலோசனை கூட்டம் நேற்று கவர்னர் மாளிகையில் நடந்தது. கூட்டத்திற்கு கவர்னர் தமிழிசை சவுந்தரராஜன் தலைமை தாங்கினார். சுகாதாரத்துறை செயலாளர் உதயகுமார் மற்றும் குஜராத், மராட்டியம், தமிழ்நாடு, ஆந்திரா, புதுச்சேரி ஆகிய இடங்களை சேர்ந்த சிறுநீரகவியல் மருத்துவ நிபுணர்கள் கலந்துகொண்டனர்.
கூட்டத்தில், தேசிய சிறுநீரக நோய்கள் ஆராய்ச்சி மையத்தில் இருந்து வந்திருந்த மருத்துவ நிபுணர்கள், மத்திய அரசின் ஆயுஷ்மான் பாரத் திட்டத்தின் உதவியோடு குஜராத் மாநிலத்தில் செயல்படுத்தப்பட்டு வரும் பிரதமரின் டயாலிசிஸ் திட்டம், நடமாடும் டயாலிசிஸ் நிலையத்தின் பயன்கள், கிராமப்புற மக்களுக்கு சிறுநீரக சிகிச்சையை கொண்டு சேர்ப்பது குறித்து விளக்கம் அளித்தனர்.
தொடர்ந்து சிறுநீரகவியல் துறையில் சாதனை புரிந்த இளம் மருத்துவ நிபுணர்களுக்கு கவர்னர் தமிழிசை சவுந்தரராஜன் பாராட்டு சான்றிதழ் வழங்கினார்.
கூட்டத்தின் முடிவில் கவர்னர் தமிழிசை சவுந்தரராஜன் நிருபர்களிடம் கூறியதாவது:-
ஆலோசனை
பிதமரின் ஆயுஷ்மான் பாரத் மருத்துவ காப்பீட்டுத் திட்டத்தின் கீழ், தேசிய டயாலிசிஸ் திட்டத்தில் மாநிலத்தின் எந்த பகுதியில் இருந்தும் வந்து இலவச சிகிச்சை பெறமுடியும். அதற்கு செலவாகும் பயண செலவு இந்த திட்டத்தின் மூலம் வழங்கப்படும். இதுபோன்ற திட்டம் புதுவையிலும் கொண்டுவர வேண்டும் என்ற நோக்கத்தில் இந்த ஆலோசனை கூட்டம் நடைபெற்றது.
நோயாளிகளின் பாதுகாப்பை கருத்தில் கொண்டு ஒற்றை பயன்பாடு டயாலிசிஸ் முறை, எதிர்காலத்தில் சிறுநீரக நோய்கள் ஏற்படுவதைத் தடுக்க நவீன முறையை பயன்படுத்தி வெற்றி கண்டவர்கள் இந்த கூட்டத்தில் கலந்துகொண்டு பல்வேறு ஆலோசனைகளை வழங்கியுள்ளனர்.
இந்த திட்டங்களை புதுச்சேரி அரசு ஆஸ்பத்திரிகளில் செயல்படுத்துவது குறித்த ஆலோசனை நடைபெற்றது. அரசு மருத்துவமனைகளில் இந்த திட்டத்தை விரைவாக செயல்படுத்துவதற்கான முயற்சிகளை செய்து வருகிறோம்.
100 சதவீதம் தடுப்பூசி
புதுச்சேரியில் ஏறக்குறைய அனைத்து கிராமங்களிலும் முழுமையாக தடுப்பூசி செலுத்தப்பட்டிருக்கிறது. நகரப்பகுதிகளில் உள்ளவர்கள் தான் தடுப்பூசி போடுவதில் தயக்கம் காட்டுகின்றனர். தயக்கம் இல்லாமல் அனைவரும் தடுப்பூசி போட்டுக்கொள்ள வேண்டும். புதுச்சேரியில் இதுவரை 13 லட்சம் டோஸ் தடுப்பூசிகள் செலுத்தப்பட்டுள்ளது.
இதில் 8 லட்சம் பேர் முதல் தவணை தடுப்பூசியும், 5 லட்சம் பேர் 2-வது தவணை தடுப்பூசியும் போட்டிருக்கிறார்கள். இதனை அதிகப்படுத்த அனைத்து முயற்சிகளும் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. வெகுவிரைவில் 100 சதவீதம் தடுப்பூசி செலுத்தப்பட்ட மாநிலமாக புதுச்சேரி மாறும். புதுச்சேரியில் இதுவரை ஒமைக்ரான் தொற்று ஒருவருக்கும் பரவ வில்லை. இங்குள்ள மருத்துவமனைகளை உலக தரத்திற்கு உயர்த்த சுகாதாரத்துறையில் தனித்தனியாக கூட்டங்கள் நடத்தப்பட்டு வருகிறது.
இவ்வாறு அவர் கூறினார்.