தி.மு.க. அமைச்சர் சேகர்பாபுவை அ.தி.மு.க. முன்னாள் அமைச்சர் பாண்டியராஜன் பாராட்டி பேசியதால் பரபரப்பு
தி.மு.க. அமைச்சர் சேகர்பாபுவை அ.தி.மு.க. முன்னாள் அமைச்சர் பாண்டியராஜன் பாராட்டி பேசியதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
பாரதியார் பிறந்தநாள் விழா
மகாகவி பாரதியாரின் 140-வது பிறந்தநாளையொட்டி வானவில் பண்பாட்டு மையம் சார்பில் சென்னை திருவல்லிக்கேணி பார்த்தசாரதி கோவில் அருகே ஜதி பல்லக்கு ஊர்வலம் நேற்று நடந்தது. இந்த நிகழ்ச்சியை இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபு தொடங்கி வைத்தார். இதில் அ.தி.மு.க. முன்னாள் அமைச்சர் பாண்டியராஜன் உள்பட பலரும் பங்கேற்றனர்.
சேகர்பாபுவுக்கு பாராட்டு
விழாவில் பாண்டியராஜன் பேசுகையில், ‘அறநிலையத்துறை மூலம் 2 ஆயிரம் ஏக்கர் கோவில் நிலங்களை, இறைவன் சொத்துகளை மீட்டு தந்த அமைச்சர் சேகர்பாபுவுக்கு நன்றி’, என்று கூறி பாராட்டினார். தி.மு.க. அமைச்சர் சேகர்பாபுவை பாராட்டி அவர் பேசியது அரசியல் களத்தில் பரபரப்பாக பேசப்பட்டது. அதனைத்தொடர்ந்து அமைச்சர் சேகர்பாபு நிருபர்களுக்கு அளித்த பேட்டியில், ‘யார் வேண்டுமானாலும் தி.மு.க.வில் இணைந்து செயல்படலாம். அ.தி.மு.க. முன்னாள் அமைச்சர் பாண்டியராஜன் எதிர்காலத்தில் எங்களோடு இணைந்து செயல்படுவது குறித்து முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின்தான் முடிவு எடுப்பார்’ என்று கூறினார்.
பாண்டியராஜன் விளக்கம்
இதுதொடர்பாக க.பாண்டியராஜன் விளக்கம் அளித்து கூறுகையில், ‘‘ஜெயலலிதாவின் கொள்கைகளால் ஈர்க்கப்பட்டு 8 ஆண்டுகளுக்கு முன்பு அ.தி.மு.க.வில் நான் இணைந்தேன். எந்த மாற்றுக்கட்சியிலும் சேரும் எண்ணம் எனக்கு இல்லவே இல்லை. என் இறுதி மூச்சுவரை அ.தி.மு.க.வுக்காக மட்டுமே உழைப்பேன். கட்சி சார்பற்ற அந்த நிகழ்ச்சியில் நான் பேசியது அரசியலுக்கு அப்பாற்பட்டது’’, என்றார்.