கடந்த 71 ஆண்டுகளுக்கு முன்பு 21 பேரை பலிவாங்கிய விமான விபத்து
நீலகிரி வான்வெளியில் கடந்த 71 ஆண்டுகளுக்கு முன்பு டிசம்பர் மாதத்தில் நடந்த விமான விபத்தில் 21 பேர் பலியான பயங்கர சம்பவம் நிகழ்ந்துள்ளது.
கோவை,
தமிழகத்தில் மலை மாவட்டமான நீலகிரியில் குன்னூர் அருகே கடந்த 8-ந் தேதி நடந்த பயங்கர ஹெலிகாப்டர் விபத்து இந்தியாவையே உலுக்கியது.
ஆம்..
அந்த ஹெலிகாப்டரில் டெல்லியில் இருந்து கோவை அருகே உள்ள சூலூர் விமானப்படை தளத்துக்கு நாட்டின் முப்படைகளின் தலைமை தளபதியான பிபின் ராவத் மற்றும் அவரது மனைவி மதுலிகா ராவத் வந்தனர்.
பின்னர் அவர்கள் அங்கிருந்து எம்.ஐ.17 வி-5 ரக அதி நவீன ராணுவ ஹெலிகாப்டரில் குன்னூர் வெலிங்டனில் உள்ள ராணுவ பயிற்சி கல்லூரிக்கு புறப்பட்டார்.
அவருடன் ராணுவ பாதுகாப்பு அதிகாரிகள், விமானிகள் என மொத்தம் 14 பேர் பயணித்தனர்.
அவர்கள் சென்ற ஹலிகாப்டர் இன்னும் 5 நிமிடங்களில் வெலிங்டன் பயிற்சி கல்லூரியை அடைந்து விடும் என்கிற நேரத்தில் தான், அந்த கோர விபத்து குன்னூர் காட்டேரி பகுதியில் நடந்தது.
இதனால் ஹெலிகாப்டரில் இருந்த தலைமை தளபதி உள்பட 13 பேர் பலியாகி விட்டனர். ஒருவர் மட்டும் மீட்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார்.
இதே டிசம்பர் மாதம் கடந்த 71 ஆண்டுகளுக்கு முன்பு 1950-ம் ஆண்டு டிசம்பர் மாதம் 13-ந் தேதி நீலகிரியில் பயங்கர விமான விபத்து நடந்துள்ளது. அந்த விபத்தில் விமானத்தில் பயணித்த 21 பேர் பலியானார்கள். இதன்மூலம் டிசம்பர் மாதம் நீலகிரியில் மறக்க முடியாத மாதமாக வர்ணிக்கப்படுகிறது.
அப்போது நடந்த விபத்து குறித்து கோவையை சேர்ந்த ஓய்வு பெற்ற தபால் அலுவலர் நா.ஹரிகரன் கூறியதாவது:-
1950-ம் ஆண்டு டிசம்பர் 13-ந் தேதி காலையில் சென்னையில் இருந்து பெங்களூரு சென்று கோவை வழியாக திருவனந்தபுரம் செல்லும் ஏர் இந்தியா டகோடா என்ற விமானம் கோவைக்கு அருகே வந்த போது திடீரென மாயமானது.
அதை தேடும் பணியில் வெலிங்டன் ராணுவ கல்லூரி விமானப்படை வீரர்கள், ஊட்டி போலீசார் மற்றும் தீயணைப்பு துறையினர் ஈடுபட்டனர்.
அப்போது, அந்த விமானம் நீலகிரி மாவட்டம் கீழ் கோத்தகிரி அருகே உள்ள ரங்கசாமி மலை சிகரத்தில் மோதி விபத்துக்கு உள்ளாகி கிடப்பதை கண்டு வனத்துறையினர் அதிர்ச்சி அடைந்தனர்.
அவர்கள் கொடுத்த தகவலின் பேரில் கண்டறிந்து வெலிங்டன் ராணுவ கல்லூரி உயர் அதிகாரிகள் மற்றும் ராணுவத்தினர் விரைந்து வந்தனர்.
அங்கு, குன்றில் மோதி விமானம் நொறுங்கி கிடப்பதையும், அதில் பயணித்த 21 பேர் உடல் கருகி கிடந்ததையும் கண்டுபிடித்தனர்.
விமானம் விழுந்து நொறுங்கிய இடம் கீழ் கோத்தகிரியில் இருந்து சுமார் 5 கிலோ மீட்டர் தூரத்தில் உள்ள அடர்ந்த காட்டுப்பகுதி ஆகும்.
ஆனாலும் விமானத்தில் பயணித்தவர்களின் உடைமைகளை போலீசார் மீட்டனர். அந்த விமானத்தில் கொண்டுவரப்பட்ட தபால் பைகளை தபால் அதிகாரிகள் கைப்பற்றி முறையாக பட்டுவாடா செய்தனர்.
இவ்வாறு அவர் கூறினார்.
இது குறித்து நீலகிரி ஆவண காப்பக இயக்குனர் வேணுகோபால் கூறியதாவது
1950-ம் ஆண்டு டிசம்பர் மாதம் நடைபெற்ற விமான விபத்தில் 17 பயணிகளும், விமானிகள் மற்றும் பணிப்பெண்கள் 4 பேர் என மொத்தம் 21 பேர் பலியாகினர்.
டக்ளஸ் டி.சி.3 சி.47 ரகத்தை சேர்ந்த அந்த விமானம் 13-ந் தேதி மாயமாகி அடர்ந்த காட்டுக்குள் பாறை பகுதியில் விழுந்து நொறுங்கியது. இதனால் அதை 6 நாட்களுக்கு பிறகு 19-ந் தேதி தான் கண்டறிந்தனர்.
வன அதிகாரி அய்யன்னா, வனவர் குட்டப்பா கரூப் ஆகியோர் தான் வனப்பகுதிக்குள் விமானம் நொறுங்கி பலரும் பலியாகி கிடப்பதை முதலில் கண்டறிந்தனர்.
அதன்பிறகு தான் ராணுவத்தினர், போலீசார் 100-க்கும் அதிகமாக சென்று மீட்பு பணியை மேற்கொண்டனர். மாயமான விமானத்தை கண்டறிந்து கொடுப்பவர்களுக்கு ரூ.500 ரொக்கப்பரிசு வழங்கப்படும் என்று அப்போதைய கோவை டி.எஸ்.பி. அறிவித்தார்.
அதை வன அதிகாரிகள் பெற்றனர். வனப்பகுதிக்குள் உடல்கள் கிடந்ததாலும், கீழ் கோத்தகிரி வனப்பகுதியில் வனவிலங்குகள் நடமாட்டம் இருந்ததால் மிகவும் சிரமப்பட்டு உடல்கள் மீட்கப்பட்டன.
இந்த விமான விபத்தில் விமானி பிரவ்ன் வைஸ்மேன், துணை விமானி ராம்நாத் நாராயணன், விமான பணிப்பெண் சிந்தியா செலின், டாடா இன்ஸ்டிடியூட் ஆராய்ச்சியாளர் பி.கே.கபூர், அபயசிங்,
இரும்பு ஆலை நிர்வாகி சி.பி. ஹரி, ஆபிரகாம் வாலட் மற்றும் அவருடைய மனைவி, இங்கிலாந்து நாட்டை சேர்ந்த தெய்ன், ரோபே, சி.ஜி. மார்ஷல், சுவிட்சர்லாந்து நாட்டை சேர்ந்த செய்லே, பிரிக் உள்பட 21 பேர் பலியானார்கள்.
இவ்வாறு அவர் கூறினார்.
நீலகிரி மாவட்டத்தில் டிசம்பர் மாதத்தில் பனிமூட்டத்தால் விமானம் திசைமாறி சென்றதால் விபத்து நடந்தது தெரியவந்தது. அதேபோல் தற்போது நடந்த ஹெலிகாப்டர் விபத்தும் டிசம்பர் மாதத்தில் நடந்து உள்ளதால் நீலகிரியில் வான்வெளியில் நடந்த பயங்கரங்கள், டிசம்பர் மாதத்தில் மறக்க முடியாத ஒன்றாகி விட்டது.