விழுப்புரம் சம்பவம்: நிரந்தர பணி நீக்கம் செய்யப்படுவீர் - நடத்துனர், ஓட்டுநர்களுக்கு போக்குவரத்துறை எச்சரிக்கை

விழுப்புரம் சம்பவம், போக்குவரத்து கழக வரலாற்றில் இது ஒரு கருப்பு நிகழ்வு ஆகும் என போக்குவரத்துறை தெரிவித்துள்ளது.

Update: 2021-12-11 03:20 GMT
விழுப்புரம்,

விழுப்புரத்தில் ஓடும் பஸ்சில் கல்லூரி மாணவிக்கு பாலியல் தொல்லை கொடுத்த சம்பவத்தில் அரசு பஸ் கண்டக்டர், டிரைவர் கைது செய்யப்பட்டனர். உடனடியாக அவர்கள் இருவரும் பணியிடை நீக்கமும் செய்யப்பட்டனர்.  

சிலம்பரசன் மீது பலாத்காரம் செய்யும் நோக்கத்திற்காக கடத்திச்செல்லுதல், தப்பிக்க விடாமல் தடுத்தல், பாலியல் தொந்தரவு கொடுத்தல், பெண்களுக்கு எதிரான வன்கொடுமை ஆகிய சட்டப்பிரிவுகளின் கீழும், அன்புச்செல்வன் மீது குற்றத்திற்கு உடந்தையாக இருத்தல் சட்டப்பிரிவின் கீழும் போலீசார் வழக்குப்பதிவு செய்து இருவரையும் கைது செய்தனர்.

இந்தநிலையில்,  இது தொடர்பாக போக்குவரத்துறை வெளியிட்டுள்ள அறிக்கையில்,

விழுப்புரம் அருகே ஓடும் பேருந்தில் கல்லூரி மாணவிக்கு பாலியல் தொல்லை அளித்த  விவகாரத்தில் மாணவிக்கு பாலியல் தொல்லை கொடுத்த நடத்துனர் சிலம்பரசன், உடந்தையாக இருந்ததாக ஓட்டுனர் அன்புச்செல்வன் ஆகியோர் பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளனர். 

இந்த சம்பவம் போக்குவரத்து கழகத்திற்கு தலைகுனிவையும், களங்கத்தையும் பொதுமக்கள் மத்தியில் ஏற்படுத்தியுள்ளது. போக்குவரத்து கழக வரலாற்றில் இது ஒரு கருப்பு நிகழ்வு ஆகும்.

இதுபோன்ற நிகழ்வுகளை வரும் காலங்களில் போக்குவரத்து கழக பணியாளர்கள் அனுமதிக்கக்கூடாது, மீறி ஈடுபடும் பணியாளர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்பட்டு நிரந்தர பணி நீக்கம் செய்யப்படுவார்கள்.

இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

மேலும் செய்திகள்