வாகனங்களை சாலையில் நிறுத்தி சிஐடியு போராட்டம்

குண்டும், குழியுமான சாலைகளை செப்பனிடக்கோரி சாலையில் வாகனங்களை நிறுத்தி சிஐடியுவினர் போராட்டத்தில் ஈடுபட்டதால் போக்குவரத்து பாதிக்கப்பட்டது

Update: 2021-12-10 18:26 GMT
குண்டும், குழியுமான சாலைகளை செப்பனிடக்கோரி சாலையில் வாகனங்களை நிறுத்தி சி.ஐ.டி.யு.வினர் போராட்டத்தில் ஈடுபட்டதால் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
நூதன போராட்டம்
பெட்ரோல், டீசல், சமையல் எரிவாயு விலையை மத்திய, மாநில அரசுகள் உயர்த்த கூடாது, குண்டும், குழியுமாக உள்ள சாலைகளை உடனடியாக செப்பனிட வேண்டும் என்று சி.ஐ.டி.யு. தொழிற்சங்கத்தினர் வலியுறுத்தி வருகின்றனர். இந்த கோரிக்கையை வலியுறுத்தி சி.ஐ.டி.யு., விவசாய சங்கம், விவசாய தொழிலாளர்கள் சங்கம், இந்திய ஜனநாயக வாலிபர் சங்கம், இந்திய மாணவர் சங்கம், ஜனநாயக மாதர் சங்கம், அரசு ஊழியர் சம்மேளனம் உள்ளிட்ட 8 அமைப்புகளை சேர்ந்தவர்கள்  இன்று மதியம் சுதேசி மில் அருகே ஒன்று கூடினர். பின்னர் அவர்கள் தங்களது வாகனங்களை சாலையில் நிறுத்தி திடீரென போராட்டத்தில் ஈடுபட்டனர்.
போக்குவரத்து பாதிப்பு
போராட்டத்திற்கு சி.ஐ.டி.யு. முருகன், சீனிவாசன், சத்யா, சஞ்சாய், ஜெயபிரகாஷ், பிரவீன், பிரபுராஜ் ஆகியோர் தலைமை தாங்கினார். இதில் 100-க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர். அவர்கள் தங்களது ஆட்டோ, டாக்சி, மினிவேன் ஆகியவற்றை கொண்டு வந்து வெங்கடசுப்பா ரெட்டியார் சிலையை சுற்றிலும் நிறுத்தி கொண்டு போராட்டத்தில் ஈடுபட்டனர்.
அப்போது அவர்கள் மத்திய, மாநில அரசுகளுக்கு எதிராக கோஷங்கள் எழுப்பினர். இதனால் அந்த பகுதியில் கடுமையான போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. அந்த வழியாக வந்த 2 ஆம்புலன்சுகள் போக்குவரத்து நெரிசலில் சிக்கி கொண்டது. உடனே அங்கு பாதுகாப்பு பணியில் இருந்த போலீசார் போக்குவரத்தை சரி செய்து ஆம்புலன்சுகளை அனுப்பி வைத்தனர். இதனால் அங்கு சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது. சுமார் 10 நிமிடம் இந்த போராட்டம் நடந்தது.
வில்லியனூர்
இதேபோல் வில்லியனூர் கொம்யூன் பஞ்சாயத்து அருகே நடந்த போராட்டத்திற்கு நிர்வாகிகள் ராமசாமி, சங்கர், பிரேமதாசன், கலியன் ஆகியோர் தலைமை தாங்கினார். அவர்கள் தங்கள் வாகனங்களை சாலைகளில் நிறுத்தி மத்திய, மாநில அரசுகளுக்கு எதிராக கோஷங்களை எழுப்பினர்.

மேலும் செய்திகள்