விபத்தில் சிக்கிய ஹெலிகாப்டரின் இறுதி நிமிடங்கள் ... வீடியோ எடுத்தவர்கள் வெளியிட்ட பரபரப்பு தகவல்கள்
விபத்தில் சிக்கிய ஹெலிகாப்டரின் இறுதி நிமிடங்கள் குறித்து வீடியோ எடுத்தவர்கள் பரபரப்பு தகவல்களை வெளியிட்டு உள்ளனர்.
சென்னை
குன்னூரில் முப்படைகளின் தலைமைத் தளபதி பயணம் செய்த ஹெலிகாப்டர் விபத்துக்குள்ளாகி 13 பேர் உயிரிழந்த நிலையில், விபத்திற்கு சில நொடிகளுக்கு முன்னர் சுற்றுலாப் பயணிகளால் எடுக்கப்பட்ட வீடியோ வைரலாகியது.
இந்த வீடியோவில் முப்படை தளபதி பிபின் ராவத் பயணித்த ஹெலிகாப்டர் பனி மூட்டத்தால் மலைப்பகுதியில் தாழ்வாக செல்வது இடம்பெற்றது. தொடர்ந்து சிறிது நேரத்தில் அந்த ஹெலிகாப்டர் வெடித்து சிதறும் சத்தம் கேட்க, அந்த வீடியோவில் இருக்கும் நபர்கள் “என்னாச்சு உடைஞ்சுருச்சா” என அதிர்ச்சியுடன் கேட்கும் காட்சிகளும் பதிவாகியது.
இந்த நிலையில் இந்த வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாக பரவியது. தொடர்ந்து இந்த வீடியோவை எடுத்த சுற்றுலா பயணிகள் யார் என்பது குறித்தும், இந்த வீடியோ எங்கு எடுக்கப்பட்டது என்பதை உறுதி செய்ய தற்போது தனிப்படை அமைக்கப்பட்டு தீவிர விசாரணை நடைபெற்று வருகிறது.
இந்த நிலையில் கோயம்புத்தூர் ராமநாதபுரத்தைச் சேர்ந்த திருமண புகைப்படக் கலைஞரான ஜோ, தனது நண்பர் எச்.நாசர் (52) என்பவருடன் இன்று காலை கோவை போலீஸ் கமிஷ்னர் அலுவலகத்திற்கு சென்றார்.
குன்னூர் அருகே உள்ள காட்டேரி பகுதிக்கு படம் எடுப்பதற்காக சென்றதாக தெரிவித்தனர். ஹெலிகாப்டர் இருப்பதை கவனித்த ஜோ, தனது மொபைல் போனில் வீடியோ பதிவு செய்ததாக தெரிவித்தார்.
கோவை காந்திபுரத்தில் அச்சகம் நடத்தி வரும் கரும்புக்கடையைச் சேர்ந்த நாசர் மற்றும் அவரது குடும்பத்தினர் புதன்கிழமை ஊட்டிக்கு சுற்றுலா சென்றிருந்தனர். அவர்களுடன் ஜோவும் சென்று இருந்தார்.
மதியம் 12.15 மணியளவில், அவர்கள் காட்டேரி அருகே மலை ரெயில் பாதையை அடைந்தனர், அங்கு குடும்பத்தினர் புகைப்படம் மற்றும் வீடியோ எடுத்து கொண்டு இருந்தனர். அப்போது தான் ஹெலிகாப்டர் பறக்கும் சத்தம் கேட்டு வீடியோ எடுத்து உள்ளார்.
இது குறித்து ஜோ மற்றும் நாசர் கூறியதாவது:-
நான் ஹெலிகாப்டர் சத்தம் கேட்டு வீடியோ பதிவு செய்ய ஆரம்பித்தேன். அது 19 வினாடிகள் கொண்ட வீடியோ. ஹெலிகாப்டர் சீராக பறந்து மூடுபனிக்குள் மறைந்தது.
வானத்தில் ஹெலிகாப்டர் சத்தம் கேட்டு வீடியோ எடுத்தோம். இறுதியாக ஹெலிகாப்டர் பனிமூட்டத்திற்குள் மறந்தது.பின் மரத்தில் ஹெலிகாப்டர் இடித்து பயங்கர சத்தம் கேட்டத்தை தொடர்ந்து சம்பவ இடத்திற்கு விரைந்தோம். எரிந்த நிலையில் ஹெலிகாப்டர் கீழே கிடந்தது. ஹெலிகாப்டர் வீடியோவை போலீசிடம் ஒப்படைத்து விட்டோம் . ஹெலிகாப்டர் விபத்து விசாரணைக்கு எங்கள் வீடியோ முக்கிய ஆதாரங்களில் ஒன்றாகும்.
ஊட்டியை அடைந்ததும், நாங்கள் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் மற்றும் எஸ்பி அலுவலகத்தில் உள்ள அதிகாரிகளை அணுக முயற்சித்தோம். ஆனால் அதிகாரிகளுக்கு செய்தியை தெரிவிக்க முடியவில்லை. நாங்கள் இருவரும் சம்பவ இடத்திற்குத் திரும்பி, அங்குள்ள அதிகாரிகளுடன் செய்தியைப் பகிர்ந்து கொண்டோம் என கூறினார்.