3-வது மொழியை கற்க கட்டாயப்படுத்தக்கூடாது: இருமொழி கொள்கைக்கு, கவர்னர் உறுதுணையாக இருக்க வேண்டும்

தமிழ்நாட்டில் 3-வது மொழியை கற்க கட்டாயப்படுத்தக்கூடாது. இருமொழி கொள்கைக்கு கவர்னர் உறுதுணையாக இருக்க வேண்டும் என்று அமைச்சர் பொன்முடி பேசினார்.

Update: 2021-12-09 19:52 GMT
திருச்சி,

திருச்சி பாரதிதாசன் பல்கலைக்கழகத்தின் 37-வது பட்டமளிப்பு விழா பல்கலைக்கழகத்தில் நேற்று நடைபெற்றது. விழாவில் தமிழக கவர்னர் ஆர்.என்.ரவி, உயர்கல்வித்துறை அமைச்சர் பொன்முடி, இந்திய சமூக அறிவியல் ஆராய்ச்சி கழக தலைவர் (பொறுப்பு) கனகசபாபதி, பாரதிதாசன் பல்கலைக்கழக துணைவேந்தர் செல்வம் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.

விழாவில் உயர்கல்வித்துறை அமைச்சர் பொன்முடி பேசியதாவது:-

2,225 பேருக்கு பட்டம்

சங்க காலத்தில் பெண் புலவர்கள் அதிக அளவு இருந்தனர். கலாசார படையெடுப்பிற்குப்பின் அடுப்பூதும் பெண்களுக்கு படிப்பெதற்கு எனக்கூறி பெண்களின் கல்வியை தடுத்து விட்டனர். தற்போது மீண்டும் பெண்கள் அதிக அளவில் படிக்க தொடங்கியுள்ளனர்.

இந்த பட்டமளிப்பு விழாவில் மொத்தம் 2,225 பேர் பட்டம் பெற்றனர். பட்டம் பெற்றவர்களில் மாணவர்களை காட்டிலும் மாணவிகளே அதிகம். 2020-21 கல்வியாண்டில் பட்டப்படிப்பு முடித்த 1,06,231 மாணவர்களில், 71,774 மாணவிகள் பட்டம் பெறுகின்றனர். கிட்டத்தட்ட 70 சதவீதம் மாணவிகளே பட்டம் பெற்றுள்ளனர். மாணவர்களை விட மாணவிகளே அதிக அளவில் படித்து பட்டம் பெறுகின்றனர்.

கவர்னருக்கு வேண்டுகோள்

தமிழகத்தில் இரு மொழிக்கொள்கை தான் நடைமுறையில் உள்ளது. மாணவர்கள் விருப்பப்பட்டால் 3-வது மொழியை கற்றுக்கொள்ளலாம். உலகளாவிய புரிதலுக்கான மொழியாக ஆங்கிலமும், நமது மாநில மொழியாக தமிழும் உள்ளது. மாணவர்கள் விருப்பத்திற்கு ஏற்ப 3-வது மொழியாக இந்தி, தெலுங்கு, மலையாளம், கன்னடம் என எந்த மொழியாக இருந்தாலும் கற்றுக்கொள்ளலாம். அதேவேளையில் 3-வது மொழிகளை படிக்கச்சொல்லி கட்டாயப்படுத்தக் கூடாது.

இதற்கு கவர்னரும் உறுதுணையாக இருக்க வேண்டும் என வேண்டுகோள் வைக்கிறேன். அதனால்தான் முதல்வர் அரசு தேர்வுகளில் தமிழ் மொழியை கட்டாயமாக்கி உள்ளார். ஒரு நாட்டின் வளர்ச்சி ஒரு மாநிலத்தின் வளர்ச்சியை சார்ந்தது. இத்தகைய வளர்ச்சி கல்வியால் மட்டுமே பெற முடியும்.

இவ்வாறு அவர் பேசினார்.

மேலும் செய்திகள்