கருத்துகேட்பு கூட்டத்தை ஊழியர்கள் புறக்கணிப்பு

மின்துறை தனியார் மயமாக்கம் தொடர்பாக நடந்த கருத்து கேட்பு கூட்டத்தை மின்துறை ஊழியர்கள் புறக்கணித்தனர்

Update: 2021-12-09 18:46 GMT
மின்துறை தனியார் மயமாக்கம் தொடர்பாக நடந்த கருத்து கேட்பு கூட்டத்தை மின்துறை ஊழியர்கள் புறக்கணித்தனர்.
கருத்து கேட்பு கூட்டம்
புதுவை மின்துறையை தனியார் மயமாக்க மத்திய அரசு அறிவிப்பு வெளியிட்டுள்ளது. இதற்கு மின்துறை ஊழியர்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்து, மின்துறை தனியார் மய எதிர்ப்பு போராட்ட குழுவை உருவாக்கி பல்வேறு கட்ட போராட்டங்களை நடத்தி வருகின்றனர்.
தனியார் மயத்தினால் ஏற்படும் சாதக, பாதகங்கள் குறித்து ஊழியர்களுக்கு விளக்கிட கருத்துகேட்பு கூட்டத்துக்கு ஏற்பாடு செய்யப்பட்டது. மின்துறை செயலாளர் விக்ராந்த் ராஜா தலைமையில் இந்த கூட்டம் நேற்று தொடங்கி 2 நாட்கள் நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டு இருந்தது. இதற்கு எதிர்ப்பு தெரிவித்து மின்துறை பொறியாளர்கள், ஊழியர்கள் நேற்று முன்தினம் போராட்டத்தில் ஈடுபட்டனர். 
ஊழியர்கள் புறக்கணிப்பு
இந்த நிலையில் கருத்து கேட்பு கூட்டத்திற்காக மின்துறை செயலாளர் விக்ராந்த் ராஜா நேற்று காலை மின்துறை தலைமை அலுவலகத்துக்கு வந்தார். அங்குள்ள கருத்தரங்கு கூடத்தில் அதிகாரிகள், ஊழியர்களின் வருகைக்காக அவர் காத்திருந்தார். ஆனால் மின்துறை ஊழியர்கள் கூட்டத்தை புறக்கணித்து, தங்கள் கோரிக்கைகளை வலியுறுத்தி 2-வது நாளாக நேற்றும் தலைமை அலுவலகத்தில் உள்ளிருப்பு போராட்டம் நடத்தினர்.
இதற்கிடையே கருத்து கேட்பு கூட்டத்தில் அரசியல் கட்சியினர், சமூக அமைப்புகள், பொதுமக்கள் ஆகியோரையும் அழைத்து கருத்துகள் கேட்க வேண்டும் என்று தமிழர் களம் அமைப்பினர், மின்துறை தலைமை அதிகாரியை சந்தித்து கோரிக்கை மனு அளித்தனர்.

மேலும் செய்திகள்