விமானி வருண்சிங் பெங்களூரு கொண்டு செல்லப்பட்டார்
விமானி வருண்சிங் பெங்களூரு கொண்டு செல்லப்பட்டார்
ஹெலிகாப்டர் விபத்தில் படுகாயம் அடைந்த விமானி வருண்சிங் மேல் சிகிச்சைக்காக விமானம் மூலம் பெங்களூரு ராணுவ மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார்.
காயங்களுடன் மீட்பு
நீலகிரி மாவட்டம் குன்னூர் அருகே நடைபெற்ற ஹெலிகாப்டர் விபத்தில் முப்படை தலைமை தளபதி பிபின் ராவத் உள்பட 13 பேர் இறந்தனர். விபத்து ஏற்பட்டதும் அந்த பகுதியை சேர்ந்த பொதுமக்கள் மற்றும் தீயணைப்பு துறையினர், மீட்பு படையை சேர்ந்தவர்கள் மீட்பு பணியில் ஈடுபட்டனர்.
இதில் 2 பேர் காயங்களுடன் மீட்கப்பட்டனர். இவர்களில் ஒருவர் விங் கமாண்டர் (விமானி) வருண்சிங் ஆவார். இவர் 80 சதவீத காயங்களுடன் மீட்கப்பட்டு, சிகிச்சைக்காக வெலிங்டனில் உள்ள ராணுவ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அங்கு அவருக்கு உயிர் காக்கும் கருவிகள் உதவியுடன், தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டது.
பெங்களூரு கொண்டு செல்லப்பட்டார்
இந்த நிலையில் அவரை மேல் சிகிச்சைக்காக பெங்களூரு ராணுவ மருத்துவமனைக்கு கொண்டு செல்ல அதிகாரிகள் முடிவு செய்தனர்.
இதையடுத்து நேற்று மதியம் வருண்சிங் ஆம்புலன்ஸ் மூலம் வெலிங்டன் ராணுவ மருத்துவமனையில் இருந்து கோவை மாவட்டம் சூலூர் விமானப்படை தளத்திற்கு கொண்டு வரப்பட்டார்.
பின்னர் அவர் அங்கிருந்து விமானம் மூலம் பெங்களூருக்கு கொண்டு செல்லப்பட்டார். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்படுகிறது.
விரைவில் குணமடைவார்
முன்னதாக விபத்தில் உயிரிழந்த முப்படை தலைமை தளபதி பிபின் ராவத் உள்பட 13 பேருக்கு அஞ்சலி செலுத்திய தெலுங்கானா கவர்னர் டாக்டர் தமிழிசை சவுந்தர் ராஜன், நிருபர்களிடம் கூறும்போது, விமானி வருண்சிங்கின் உள்ளுறுப்புகள் சீராக இயங்குகின்றன. அவர் விரைவில் குணமடைவார் என்று நம்புகிறோம் என்றார்.