தமிழக சட்டசபை நிகழ்ச்சிகளை நேரடியாக ஒளிபரப்புவது குறித்து சபாநாயகர் ஆலோசனை

தமிழக சட்டசபை நிகழ்ச்சிகளை நேரடியாக ஒளிபரப்பு செய்வதை முறைப்படுத்துவது பற்றி சபாநாயகர் அப்பாவு தலைமையில் ஆலோசனை மேற்கொள்ளப்பட்டது.

Update: 2021-12-07 23:58 GMT
சென்னை,

தமிழக சட்டசபை நிகழ்ச்சிகள் கொரோனா தொற்று பரவல் காரணமாக தற்காலிகமாக கலைவாணர் அரங்கத்தில் நடந்து வருகிறது. ஆனால் அடுத்த மாதம் (ஜனவரி) கூடும் கூட்டத்தொடரை சென்னை கோட்டையில் உள்ள சட்டசபை மண்டபத்தில் நடத்த ஆலோசனை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

அப்படி கோட்டையில் உள்ள சட்டசபையில் கூட்டத்தொடர் நடைபெற்றால் அதை நேரடி ஒளிபரப்பு செய்வதற்கான தொழில்நுட்ப நடவடிக்கைகளையும் சட்டசபை செயலகம் மேற்கொண்டு வருகிறது. நேரலை ஒளிபரப்பை நவீனமயமாக்குவது குறித்தும் ஆய்வுகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. இதற்காக சட்டசபைக்குள் சில மாற்றங்களை கொண்டு வரலாம் என்று கூறப்படுகிறது.

சபாநாயகர் ஆலோசனை

இந்த நிலையில் சென்னை தலைமைச்செயலகத்தில் சபாநாயகர் அப்பாவு தலைமையில் நேற்று ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. இதில் துணை சபாநாயகர் பிச்சாண்டி, சட்டசபை செயலாளர் சீனிவாசன், தகவல் தொழில்நுட்ப துறை முதன்மை செயலாளர் நீரஜ் மிட்டல் மற்றும் சட்டசபை உயர் அதிகாரிகள் கலந்து கொண்டனர்.

2022-ம் ஆண்டுக்கான கவர்னர் உரை கூட்டத்தொடரை ஜனவரி மாதம் கோட்டையில் உள்ள சட்டசபை மண்டபத்தில் நடத்துவதற்காக நடைபெறும் பூர்வாங்க பணிகள் பற்றி ஆலோசிக்கப்பட்டது. அதோடு, நேரடி ஒளிபரப்பிற்காக அவையில் மேற்கொள்ள வேண்டிய நவீன தொழில்நுட்பங்களை இணைக்கும் பணியில் உள்ள முன்னேற்றம் குறித்தும் ஆலோசிக்கப்பட்டது.

அவைக்குறிப்பில் நீக்கப்பட்டால்

தமிழக சட்டசபையில் இருந்து இதுவரை கவர்னர் மற்றும் பட்ஜெட் உரை மட்டுமே நேரடி ஒளிபரப்பு செய்யப்பட்டு வந்தது. ஆனால் முதன்முதலாக ஒட்டுமொத்த அவை நடவடிக்கையும் இனி நேரடி ஒளிபரப்பிற்கு கொண்டு வரப்படுவதால், அதற்கு அதிக முக்கியத்துவம் கொடுத்து பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

உறுப்பினர் ஒருவரது பேச்சு, அவை மரபிற்கு எதிராக இருந்து அது நேரலையில் ஒளிபரப்பானாலும், அதை அவைக்குறிப்பில் இருந்து நீக்கிவிட்டால், அதை நீக்கிய நேரத்திற்கு பிறகு ஏதாவது டி.வி. சேனல் மற்றும் சமூக வலைதளங்கள் அந்த பேச்சை மீண்டும் ஒளிபரப்புவதை கண்காணிக்கும் வகையிலும் அதை முறைப்படுத்தவும் கொண்டு வரப்பட வேண்டிய தொழில்நுட்பங்கள் குறித்து இந்த கூட்டத்தில் ஆலோசிக்கப்பட்டது.

நேரடி ஒளிபரப்பை சட்டசபையின் இணையதளத்தின் மூலமாகவும் காண வழிவகை செய்யப்படும் என்று தெரிகிறது. மேலும் நேரடி ஒளிபரப்பு தொடர்பாக தூர்தர்ஷன் நிறுவனத்துடனும் சட்டசபை செயலகம் பேச்சுவார்த்தை நடத்தி வருகிறது.

மேலும் செய்திகள்