அரசு வேலை வாங்கி தருவதாக கூறி ரூ.14 லட்சம் மோசடி செய்த 2 பேர் கைது
அரசு வேலை வாங்கி தருவதாக கூறி ரூ.14 லட்சம் மோசடி செய்த 2 பேர் கைது செய்யப்பட்டனர். மேலும், இந்த வழக்கில் தொடர்புடைய அ.தி.மு.க. பிரமுகர் உள்பட 3 பேரை போலீசார் வலைவீசி தேடி வருகிறார்கள்.
கரூர்,
டிப்ளமோ பட்டதாரி
கரூர் ஆண்டாங்கோவில் மகாத்மா காந்தி சாலையை சேர்ந்தவர் சிவக்குமார் (வயது 30). டிப்ளமோ பட்டதாரியான இவருக்கு கரூர் வடக்கு காந்தி கிராமத்தை சேர்ந்த தங்கவேலிடம் (46) பழக்கம் ஏற்பட்டது.
அப்போது அவர் தனக்கு அரசு அதிகாரிகளிடம் செல்வாக்கு இருப்பதால் கிராம நிர்வாக அதிகாரி வேலை வாங்கித்தருவதாக கூறினார்.
போலி பணிநியமன ஆணை
இதனை உண்மை என்று நம்பிய அவர் வேலை வாங்கி தருவதாக கூறிய தங்கவேல், மோகனூரில் துணை வட்டார வளர்ச்சி அதிகாரியாக பணியாற்றி வரும் தங்கவேலுவின் மனைவி சுதா, வாங்க பாளையத்தில் உள்ள அரசு பள்ளியில் ஆசிரியராக பணியாற்றி வரும் மற்றொரு மனைவி சர்மிளா, தங்கவேலின் அண்ணன் மகள் சங்கீதா (40), கடலூர் மாவட்டத்தை சேர்ந்த அ.தி.மு.க. பிரமுகர் மனோகரன் ஆகிய 5 பேரிடம் ரூ.14 லட்சம் கொடுத்துள்ளார்.
இதையடுத்து, கிராம நிர்வாக அலுவலருக்கான பணி நியமன ஆணை அவருக்கு வழங்கப்பட்டது. பின்னர் கிராம நிர்வாக அலுவலகத்திற்கு சென்றபோது அது போலி பணி நியமன ஆணை என்பது தெரியவந்தது.
2 பேர் கைது
அரசு வேலை வாங்கி தருவதாக கூறி ரூ.14 லட்சம் மோசடி செய்ததை உணர்ந்த சிவக்குமார் கரூர் மாவட்ட குற்றப்பிரிவு போலீசில் புகார் அளித்தார். இதன் பேரில் பொருளாதார குற்றப்பிரிவு இன்ஸ்பெக்டர் பியுலாஞான வசந்தி வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினார். பின்னர் இந்த சம்பவம் தொடர்பாக தங்கவேல், அவரது அண்ணன் மகள் சங்கீதா ஆகிய 2 பேரையும் போலீசார் கைது செய்தனர்.
மேலும், இந்த வழக்கில் தொடர்புடைய அ.தி.மு.க. பிரமுகர் மனோகரன், தங்கவேலின் மனைவிகளான சுதா, சர்மிளா ஆகிய 3 பேரை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர்.