மணலி புதுநகர், வடிவுடையம்மன் நகர பகுதியில் வெள்ள சீரமைப்பு பணி குறித்து மு.க.ஸ்டாலின் ஆய்வு

மணலி புதுநகர், வடிவுடையம்மன் நகர பகுதியில் மேற்கொள்ளப்பட்ட மழை வெள்ள சீரமைப்பு பணி குறித்து முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் ஆய்வு மேற்கொண்டார்.

Update: 2021-12-06 21:59 GMT
சென்னை,

கனமழையால் கொசஸ்தலையாற்றில் ஏற்பட்ட வெள்ளப் பெருக்கால் மணலி புதுநகர், வடிவுடையம்மன் நகரில் வெள்ளத்தால் சூழப்பட்ட குடியிருப்புப் பகுதிகளை முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் நேரில் சென்று பார்வையிட்டு, ஆய்வு செய்து, தேங்கியுள்ள வெள்ளநீரை அகற்றிட அலுவலர்களுக்கு உத்தரவிட்டிருந்தார்.

அதன்படி, சென்னை, மணலி புதுநகர், வடிவுடையம்மன் நகரில் மேற்கொள்ளப்பட்ட சீரமைப்பு மற்றும் நிவாரணப் பணிகளை நேற்று காலை முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் நேரில் சென்று பார்வையிட்டு, ஆய்வு செய்தார்.

நிரந்தர தீர்வுக்கு நடவடிக்கை

அப்போது அப்பகுதி மக்கள், சீரமைப்புப் பணிகள் சிறப்பான முறையில் நடைபெற்று வருவதாகவும், அத்தியாவசியப் பொருட்கள் தடையில்லாமல் கிடைத்து வருவதாகவும், நடைபெற்று வரும் சீரமைப்புப் பணிகளை முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலினே நேரடியாக ஆய்வு செய்வது தங்களுக்கு மனநிறைவை தருவதாகவும் தெரிவித்தனர்.

முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் இப்பகுதியில் மழை வெள்ளத்தால் ஏற்படும் பாதிப்புகளுக்கு நிரந்தர தீர்வு காண்பதற்கு உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்று தெரிவித்தார்.

கொசஸ்தலை ஆற்றுப் பகுதியில் ஆய்வு

பின்னர், திருவள்ளூர் மாவட்டம், பொன்னேரி வட்டம், வெள்ளிவாயல் ஊராட்சி, கொசஸ்தலை ஆற்றுப் பகுதியை முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் பார்வையிட்டு ஆய்வு செய்து, கொசஸ்தலை ஆற்றில் இருந்து உபரிநீர் குடியிருப்பு பகுதிகளில் புகாதவண்ணம் நடவடிக்கை எடுத்திட நீர்வளத்துறை அலுவலர்களுக்கு உத்தரவிட்டார்.

இந்த ஆய்வின்போது, இந்து சமயம் மற்றும் அறநிலையத் துறை அமைச்சர் பி.கே.சேகர்பாபு, சட்டமன்ற உறுப்பினர்கள் எஸ்.சுதர்சனம், துரை சந்திரசேகர், பெருநகர சென்னை மாநகராட்சி கமிஷனர் ககன்தீப் சிங் பேடி மற்றும் அரசு உயர் அலுவலர்கள் உடனிருந்தனர்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

மேலும் செய்திகள்