செல்போன் மோகத்தில் பணம் பறிக்க முயற்சி சிறுவன் கடத்தப்பட்டதாக நாடகமாடிய கல்லூரி மாணவர் கைது

திருக்கனூரில் செல்போன் மோகத்தில் சிறுவன் கடத்தப்பட்டதாக நாடகமாடி பணம் பறிக்க முயன்ற கல்லூரி மாணவர் கைதானார்.

Update: 2021-12-04 15:38 GMT
திருக்கனூர்
திருக்கனூரில் செல்போன் மோகத்தில் சிறுவன் கடத்தப்பட்டதாக நாடகமாடி பணம் பறிக்க முயன்ற கல்லூரி மாணவர் கைதானார்.

கல்லூரி மாணவர்

திருக்கனூரை அடுத்த தமிழக பகுதியான மூங்கில்பட்டு புளியந்தோப்பு வீதியை சேர்ந்தவர் உதயன் (வயது 20). விழுப்புரத்தில் உள்ள தனியார் கல்லூரியில் பி.சி.ஏ. 3-ம் ஆண்டு படித்து வருகிறார். 
இவர் நேற்று  மாலை தனது எதிர்வீட்டை சேர்ந்த அன்பழகன் (40) என்பவரின் 5 வயது மகனை திருக்கனூருக்கு கடைக்குச் செல்வதாக கூறி, மோட்டார் சைக்கிளில் அழைத்து வந்துள்ளார்.
இந்தநிலையில் இரவு 7 மணியளவில் மூங்கில்பட்டில் உள்ள தனது வீட்டிற்கு உதயன் மட்டும் சென்றுள்ளார். அங்கு தனது தாயிடம், மண்ணாடிப்பட்டில் இருந்து திருக்கனூர் செல்லும் சாலையில் வந்தபோது மோட்டார் சைக்கிளை 4 பேர் கொண்ட மர்ம கும்பல் வழிமறித்து, தன்னை தாக்கிவிட்டு, சிறுவனை ஒரு லட்சம் கேட்டு கடத்திச் சென்று விட்டதாக தெரிவித்துள்ளார்.

செல்போனில் பேசிய பெண்

இதை கேட்டு உதயனின் தாய் அதிர்ச்சி அடைந்தார். உடனே அவர்களும், சிறுவனின் பெற்றோர் மற்றும் அந்த கிராமத்தை சேர்ந்த 100-க்கும் மேற்பட்டோர் திருக்கனூர் போலீஸ் நிலையம் எதிரே திரண்டனர்.
சிறுவன் கடத்தப்பட்டதாக கிடைத்த தகவலை அடுத்து மேற்கு பகுதி போலீஸ் சூப்பிரண்டு ரங்கநாதன் தலைமையில் இன்ஸ்பெக்டர் கணேசன், சப்-இன்ஸ்பெக்டர்கள் வேலு, குமார் மற்றும் போலீசார் திருக்கனூர் மற்றும் சுற்றியுள்ள பல்வேறு பகுதிகளில் தேடுதல் வேட்டையில் ஈடுபட்டனர்.
அவர்களுடன் சேர்ந்து உதயனும் சிறுவனை தேடினார். இதற்கிடையே உதயனின் செல்போனை போலீசார் பறிமுதல் செய்து வைத்திருந்தனர். அந்த போனுக்கு இரவு 8.30 மணியளவில் ஒரு அழைப்பு வந்தது.

குட்டு உடைந்தது

அதை எடுத்து போலீசார் பேசியபோது, மறுமுனையில் பெண் ஒருவர் பேசினார். அந்த பெண் தனது பெயர் பழனியம்மாள் என்றும் தனது வீட்டில் உதயன் ஒரு சிறுவனை விட்டு விட்டுச் சென்றதாகவும் இன்னும் அவனை அழைத்துச் செல்ல வரவில்லை என்பதால் போன் செய்ததாகவும் தெரிவித்தார்.
இதை வைத்து விசாரித்ததில் திருக்கனூர் டி.வி.மலை ரோட்டில் வசிக்கும் உதயன் நண்பரின் தாயார் தான் பழனியம்மாள் என்பதையும் அவரது வீட்டில் சிறுவன் இருப்பதையும் போலீசார் உறுதி செய்தனர்.
இதையடுத்து, அங்கு சென்ற போலீசார் சிறுவனை மீட்டு போலீஸ் நிலையத்துக்கு அழைத்து வந்தனர்.
பழனியம்மாளிடம் நடத்திய விசாரணையில், உதயன் மோட்டார் சைக்கிளில் சிறுவனை அழைத்து வந்து தனது வீட்டில் விட்டுச்சென்றது தெரியவந்தது. இதனால் சிறுவனை மர்ம கும்பல் கடத்தியதாக உதயன் நாடகமாடிய குட்டு உடைந்தது.

செல்போன் மோகம்

போலீஸ் விசாரணையில் திருக்கனூரில் உள்ள ஒரு எலக்ட்ரானிக்ஸ் கடையில் விற்பனைக்காக வைக்கப்பட்டு இருந்த புதிய செல்போனை உதயன் வாங்க விரும்பியுள்ளார். இதற்காக சிறுவன் கடத்தப்பட்டதாக நாடகமாடி அவனது பெற்றோரிடம் இருந்து பணத்தை பெற முயற்சித்திருக்கலாம் என போலீசார் தெரிவித்தனர். பணம் பறிக்கும் நோக்கத்துடன் சிறுவனை கடத்தியதாக உதயன் மீது திருக்கனூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து அவரை கைது செய்தனர்.
மீட்கப்பட்ட சிறுவனை அவனது பெற்றோரிடம் போலீசார் ஒப்படைத்தனர். செல்போன்    மோகத்தில் சிறுவன் கடத்தப்பட்டதாக நாடகமாடிய       கல்லூரி மாணவர் கைதான சம்பவம் திருக்கனூரில் பரபரப்பை ஏற்படுத்தியது.

மேலும் செய்திகள்