"கட்சிக்கு தொடர்பு இல்லாதவர்களால் குழப்பம் ஏற்படுகிறது" - ஜெயக்குமார்
கட்சியில் இருந்து நீக்கப்பட்டவர்கள் சமூக விரோதிகளுடன் இணைந்து குழப்பம் ஏற்படுத்தி வருவதாக அ.தி.மு.க. முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் குற்றஞ்சாட்டியுள்ளார்.
சென்னை,
அ.தி.மு.க.வில் ஒருங்கிணைப்பாளர், இணை ஒருங்கிணைப்பாளர் பதவிக்கான உள்கட்சி தேர்தல் வருகிற 7-ந்தேதி நடைபெற உள்ளது. இந்த தேர்தலில் போட்டியிடுவதற்கான வேட்புமனு தாக்கல் சென்னை ராயப்பேட்டையில் உள்ள அ.தி.மு.க. தலைமை அலுவலகமான எம்.ஜி.ஆர். மாளிகையில் நேற்று தொடங்கியது.
நேற்று சென்னை ஓட்டேரியைச் சேர்ந்த அ.தி.மு.க. தொண்டர் ஓமப்பொடி பிரசாத் சிங் என்பவர் வேட்பு மனு வாங்க வந்தார். அப்போது அங்கு இருந்த தொண்டர்கள் சிலர் அவரை தாக்கி கட்சி அலுவலகத்தை விட்டு விரட்டி அடித்தனர். மேலும் இன்றும் போட்டியிட விருப்பமனு கேட்டு வந்த புகழேந்தி ஆதரவாளர்கள் மீது அங்கிருந்த தொண்டர்கள் தாக்குதல் நடத்தினர். இதனால் இரண்டாவது நாளாக இன்றும் அ.தி.மு.க அலுவலகத்தில் பரபரப்பு ஏற்பட்டது.
இந்த நிலையில், இன்று சென்னையில், செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த இமுன்னாள் அமைச்சர் ஜெயக்குமார், எம்.ஜி.ஆர் மாளிகையில் அமைதியான முறையில் தேர்தல் நடைமுறைகள் நடந்துகொண்டிருக்கும் நிலையில் அ.தி.மு.க.வின் நற்பெயருக்கு களங்கம் விளைவிக்கும் வகையில் கட்சிக்கு தொடர்பில்லாதவர்களும் கட்சியில் இருந்து நீக்கப்பட்டவர்களும் சிலர், சமூக விரோதிகளுடன் இணைந்து குழப்பத்தை ஏற்படுத்தி வருவதாக குற்றஞ்சாட்டினார்.
அ.தி.மு.க. உட்கட்சி தேர்தல் அமைதியாகவும் ஜனநாயக முறைப்படியும் நடைபெற இருக்கும் சூழலில் சட்டம் ஒழுங்கு பிரச்சினையை ஏற்படுத்தி பொது அமைதிக்கு குந்தகம் விளைவிப்போர் மீது காவல்துறை உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கேட்டுக் கொண்டுள்ளார். மேலும், இதுதொடர்பாக காவல்துறை ஆணையரிடம் மனு அளித்துள்ளதாகவும் அவர் கூறினார்.