வீடுகளை சுற்றி வெள்ளம்: அய்யப்பன்தாங்கல் பகுதியில் மு.க.ஸ்டாலின் ஆய்வு

முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் அய்யப்பன்தாங்கல் பகுதியில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு உணவு மற்றும் நிவாரணப் பொருட்களை வழங்கினார்.

Update: 2021-12-04 08:34 GMT
சென்னை:

முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் சென்னை பெருமழை வெள்ளத்தில் பொது மக்கள் சிக்கி தவித்த போது நேரில் களத்தில் இறங்கி நிவாரண பணிகளை முடுக்கி விட்டார். வெள்ளத்தில் நடந்து சென்று பல இடங்களை பார்வையிட்டார்.

தண்ணீர் தேங்கி நின்ற பகுதிகளில் மக்களின் சிரமங்களை கேட்டறிந்து அவர்களுக்கு தேவையான உதவிகளையும் வழங்கினார்.

அதோடு அவரே களத்தில் இறங்கி பணியாற்றியதால் ஒட்டு மொத்த அரசு எந்திரமும் மின்னல் வேகத்தில் செயல்பட்டன. முதலில் பிரதான சாலைகளில் தேங்கிய மழைநீர் அகற்றப்பட்டது.

அதைத்தொடர்ந்து உட்புற சாலைகள், தெருக்களில் தேங்கி கிடந்த தண்ணீரை வெளியேற்றினார்கள்.

மக்கள் பெருந்துயரத்தில் தவித்த போது நானும் உங்களுடன் களத்தில் நிற்கிறேன். நிற்பேன் என்று நம்பிக்கையூட்டினார்.

சொன்னது போலவே மழை ஓய்ந்த பிறகும் எங்கெல்லாம் வெள்ளம் வடியாமல் இருக்கிறது என்பதை கேட்டறிந்து உடனடியாக நடவடிக்கை எடுத்து வருகிறார்.

அய்யப்பன்தாங்கல் பகுதியில் உள்ள தனலெட்சுமி நகர், குமரன் நகர், சாய்நகர், மகாலட்சுமி நகர், கணபதி நகர் ஆகிய பகுதிகளில் 500-க்கும் மேற்பட்ட வீடுகளுக்குள் வெள்ளம் புகுந்தது. இப்போது வீடுகளுக்குள் இருந்த தண்ணீர் வடிந்தாலும் வீடுகளை சுற்றி வெள்ளம் சூழ்ந்து நிற்கிறது.



இதற்கு காரணம் போரூர் ஏரி முழு அளவில் நிரம்பி உள்ளது. அங்கிருந்து உபரி நீர் மதகுகள் வழியாக வெளியேறி செல்லும் கால்வாய் பகுதிகள் ஆக்கிரமிப்பின் பிடியில் இருப்பதாகவும், அதனால் தான் வீடுகளை சூழ்ந்து நிற்கும் வெள்ளம் ஏரிக்குள் செல்ல முடியாத நிலை ஏற்பட்டிருப்பதாகவும் அந்த பகுதி பொதுமக்கள் கூறுகிறார்கள்.

இதையடுத்து அந்த பகுதியை நேரில் ஆய்வு செய்து நிரந்தர தீர்வுக்கான ஏற்பாடுகளை செய்வதற்காக அமைச்சர் துரைமுருகனை ஏற்கனவே அனுப்பி வைத்தார்.

அவர் கடந்த சில தினங்களுக்கு முன்பு நேரில் சென்று ஆய்வு நடத்தினார்.

இந்த நிலையில் முதல்- அமைச்சர் மு.க.ஸ்டாலின் இந்த பகுதிகளை நேரில் சென்று பார்வையிட்டார்.

போரூர் பைபாஸ் ரோட்டில் நின்று ஏரியை பார்வையிட்டார். ஏரியின் தற்போதைய நிலை பற்றி அதிகாரிகளிடம் கேட்ட றிந்தார்.

பின்னர் மாங்காடு சுரங்கப்பாதை வழியாக அய்யப்பன்தாங்கல்- பரணி புத்தூர் மெயின் ரோட்டில் பெட்ரோல் பங்க் அருகே மழையினால் பாதிக்கப்பட்ட பொது மக்களுக்கு உணவு மற்றும் நிவாரண பொருட்களை வழங்கினார்.

அதன் பிறகு அய்யப்பன் தாங்கல் பகுதியில் வெள்ளம் தேங்கி நிற்பதை பார்த்தார். மு.க.ஸ்டாலினை பார்த்ததும் பொதுமக்கள் ஆர்வத்துடன் அருகில் சென்று தங்கள் குறைகளை தெரிவித்தனர். அதை கவனமுடன் கேட்ட மு.க.ஸ்டாலின் இந்த பகுதியில் தண்ணீர் தேங்குவதை தடுத்து தீர்வு காணப்படும் என்று உறுதியளித்தார்.

மழை நின்ற பிறகும் பிரச்சினைக்குரிய பகுதிகளை தேடி சென்று மக்களிடம் குறை கேட்ட முதல்-அமைச்சருக்கு பொது மக்கள் நன்றி தெரிவித்தனர்.

மேலும் செய்திகள்