“பூஸ்டர் தடுப்பூசி; மத்திய அரசு அறிவித்தால் தமிழக அரசு செயல்படுத்தும்” - அமைச்சர் மா.சுப்பிரமணியன்
பூஸ்டர் தடுப்பூசி குறித்து மத்திய அரசிடம் இருந்து அறிவிப்பு வந்தால், தமிழக அரசு அதனை செயல்படுத்தும் என அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார்.
விழுப்புரம்,
தமிழகம் முழுவதும் இன்று 13-வது மெகா தடுப்பூசி முகாம் நடைபெறுகிறது. இதுவரை கொரோனா தடுப்பூசி செலுத்தாதவர்கள், இந்த முகாமில் கலந்து கொண்டு தடுப்பூசி செலுத்திக் கொள்ள வேண்டும் என மக்கள் நல்வாழ்வுத்துறை சார்பில் விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டு வருகிறது. இன்று நடைபெறும் தடுப்பூசி முகாமை ஆய்வு செய்வதற்காக மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் விழுப்புரம் மாவட்டத்திற்கு சென்றுள்ளார்.
இந்நிலையில் விழுப்புரத்தில் அமைச்சர் மா.சுப்பிரமணியன் செய்தியாளர்களை சந்தித்து பேசினார். அப்போது அவர் கூறியதாவது;-
“ஒமைக்ரான் வைரஸ் பரவலை தடுப்பதற்காக வெளிநாடுகளில் இருந்து வரும் பயணிகளுக்கு விமான நிலையங்களில் பரிசோதனை தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. அந்த வகையில் நேற்று வரை இங்கிலாந்தில் இருந்து வந்த 2 பயணிகளுக்கும், சிங்கப்பூரில் இருந்து வந்த ஒரு பயணிக்கும் கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. அது உருமாற்றம் அடைந்த கொரோனாவா, அல்லது டெல்டா வகை கொரோனாவா என்பதை கண்டறிவதற்கு ஆய்வு நடத்தப்பட்டு வருகிறது.
இந்த நிலையில் இங்கிலாந்தில் இருந்து துபாய் வழியாக இன்று காலை சென்னைக்கு வந்த 25 வயது பயணி ஒருவருக்கு கொரோனா பாதிப்பு கண்டறியப்பட்டுள்ளது. இதனால் அபாய நாடுகள் பட்டியலில் இருந்து இந்தியாவிற்கு வந்தவர்களில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை தற்போது 4 ஆக உயர்ந்துள்ளது.
மத்திய அரசு மற்றும் ஐ.சி.எம்.ஆர். வழங்கிய அறிவுறுத்தலின்படி தமிழகத்தில் தடுப்பூசி செலுத்தும் பணிகள் நடத்தப்பட்டு வருகின்றன. அவர்கள் வழங்கிய வழிகாட்டுதலின்படி தான் தடுப்பூசி டோஸ்களுக்கு இடையிலான கால அவகாசம் நிர்ணயிக்கப்பட்டுள்ளது. ‘பூஸ்டர் டோஸ்’ தடுப்பூசி குறித்து மத்திய அரசிடம் இருந்து இதுவரை எந்த அறிவிப்பும் வரவில்லை. பூஸ்டர் தடுப்பூசி குறித்து மத்திய அரசிடம் இருந்து அறிவிப்பு வந்தால், தமிழக அரசு அதனை செயல்படுத்தும்.”
இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.