அ.தி.மு.க. ஒருங்கிணைப்பாளர் தேர்தல்; வேட்புமனு தாக்கல் இன்றுடன் நிறைவு

அ.தி.மு.க. ஒருங்கிணைப்பாளர், இணை ஒருங்கிணைப்பாளர் தேர்தலில் போட்டியிடுவதற்கான வேட்புமனு தாக்கல் இன்றுடன் நிறைவு பெறுகிறது.

Update: 2021-12-04 02:37 GMT
சென்னை,

அ.தி.மு.க. ஒருங்கிணைப்பாளர் மற்றும் இணை ஒருங்கிணைப்பாளர் பதவிகளுக்கான தேர்தல் வரும் 7 ஆம் தேதி நடைபெற உள்ளது. இதையடுத்து சென்னை ராயப்பேட்டையில் உள்ள அதிமுக தலைமையகத்தில் நேற்று வேட்பு மனுத்தாக்கல் தொடங்கியது. காலை 10 மணி முதல் மாலை 3 மணி வரை வேட்பு மனுக்கள் பெறப்படும் என அறிவிக்கப்பட்டிருந்தது.

இதற்கிடையில் அ.தி.மு.க. ஒருங்கிணைப்பாளர் பதவிக்கு போட்டியிட விருப்ப மனு கேட்டு நேற்று அ.தி.மு.க. தலைமை அலுவலகத்திற்கு வந்த அ.தி.மு.க. உறுப்பினர் ஓமபொடி பிரசாத் சிங் அங்கிருந்த தொண்டர்களால் வெளியேற்றப்பட்டார்.  விதிகளை பின்பற்றாததாலும், முன்மொழிய, வழிமொழிய ஆட்கள் இல்லாததாலும் ஓமபொடி பிரசாத்துக்கு விருப்பமனு தரப்படவில்லை என்று அ.தி.மு.க. நிர்வாகிகள் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த நிலையில் அ.தி.மு.க. ஒருங்கிணைப்பாளர் மற்றும் இணை ஒருங்கிணைப்பாளர் பதவிகளுக்கு போட்டியிடுவதற்கான வேட்புமனு தாக்கல் 2-வது நாளாக இன்று நடைபெற உள்ளது. காலை 10 மணிக்கு தொடங்கி மாலை 3 மணிக்கு வேட்புமனு தாக்கல் நிறைவு பெறுகிறது. 

இதையடுத்து 2-வது மற்றும் கடைசி நாளான இன்று ஒருங்கிணைப்பாளர் மற்றும் இணை ஒருங்கிணைப்பாளர் பதவிகளுக்கு ஓ.பன்னீர்செல்வம் மற்றும் எடப்பாடி பழனிசாமி வேட்புமனு தாக்கல் செய்ய உள்ளனர். இந்த வேட்பு மனுக்கள் வரும் 5 ஆம் தேதி பரிசீலிக்கப்பட உள்ளது. அதனை தொடர்ந்து வரும் 7 ஆம் தேதி தேர்தல் நடைபெற உள்ளது. 

மேலும் செய்திகள்