மளிகை பொருட்கள் இல்லாததால் அமுதசுரபியை கட்டுமான தொழிலாளர்கள் முற்றுகை
மளிகை பொருட்கள் இல்லாததால் அமுதசுரபியை கட்டுமான தொழிலாளர்கள் முற்றுகையிட்டனர். மேலும் ஊழியர்களுடன் கடும் வாக்குவாதத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.
புதுச்சேரி
மளிகை பொருட்கள் இல்லாததால் அமுதசுரபியை கட்டுமான தொழிலாளர்கள் முற்றுகையிட்டனர். மேலும் ஊழியர்களுடன் கடும் வாக்குவாதத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.
பரிசு கூப்பன்
புதுவை மாநிலத்தில் உள்ள கட்டுமான தொழிலாளர்களுக்கு தீபாவளி பரிசாக ரூ.3 ஆயிரமும், கட்டுமான தொழிலாளர்களுக்கு ரூ.1000 பரிசு கூப்பனாகவும் வழங்கப்படும் என்று முதல்-அமைச்சர் ரங்கசாமி அறிவித்திருந்தார். அதன்படி தற்போது பரிசு கூப்பன் வழங்கப்பட்டுள்ளது.
இந்த கூப்பனை கொண்டு முதலியார்பேட்டை, முத்தியால்பேட்டை, தட்டாஞ்சாவடி, கோரிமேடு, அண்ணாநகர் மற்றும் காந்திவீதியில் உள்ள அமுதசுரபி கடைகளில் மளிகை பொருட்களை பெற்றுக்கொள்ளலாம் என்று தெரிவிக்கப்பட்டிருந்தது. இதன்படி பொருட்கள் வாங்க மக்கள் படையெடுத்து வருகின்றனர்.
மளிகை பொருட்கள் இல்லை
ஆனால் இந்த அமுதசுரபி கடைகளில் போதிய பொருட்கள் இல்லை. குறிப்பாக மளிகை சாமான்கள் என்பது இல்லாத நிலை உள்ளது. சோப்பு, சோப்பு பவுடர் போன்ற பொருட்கள் மட்டுமே உள்ளது.
ஆனால் அடித்தட்டு மக்கள் தங்கள் உணவு தேவைக்காக மளிகை பொருட்களை வாங்க அமுதசுரபியின் கடைகளுக்கு நாள்தோறும் சென்று வருகின்றனர். ஆனால் பொருட்கள்தான் கிடைப்பதில்லை. இதனால் வீண் அலைச்சலுக்கும், மன உளைச்சலுக்கும் ஆளாகியுள்ளனர்.
வாக்குவாதம்
நேற்று காந்தி வீதியில் உள்ள அமுதசுரபியில் 100-க்கும் மேற்பட்ட கட்டுமான தொழிலாளர்கள் பொருட்கள் வாங்க திரண்டனர். ஆனால் பொருட்கள் இல்லாததால் அரசு சுரபியை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர். மேலும் அதிகாரிகளுடன் வாக்குவாதம் செய்தனர். இதனால் அங்கு தள்ளுமுள்ளு ஏற்பட்டதால் பரபரப்பான சூழல் ஏற்பட்டது.
இருந்தபோதிலும் மளிகை பொருட்கள் இல்லாததால் வெறுங்கையோடு மக்கள் அங்கிருந்து கலைந்து சென்றனர். மற்ற திட்டங்களுக்கு வங்கிக்கணக்கில் பணம் செலுத்துவதுபோல் இதற்கும் வங்கி கணக்கில் பணம் செலுத்தி இருந்தால் தாங்கள் விரும்பிய பொருட்களை எந்த கடையிலும் வாங்கி இருப்போம் என்று அவர்கள் வேதனையுடன் தெரிவித்தனர்.