வழிப்பறி கொள்ளையர்களிடம் இருந்து 38 பவுன் நகைகள் மீட்பு

புதுவையில் வழிப்பறியில் ஈடுபட்ட கொள்ளையர்களிடம் இருந்து 38 பவுன் நகைகள் மீட்கப்பட்டன.

Update: 2021-12-03 16:43 GMT
புதுச்சேரி
புதுவையில் வழிப்பறியில் ஈடுபட்ட கொள்ளையர்களிடம் இருந்து 38 பவுன் நகைகள் மீட்கப்பட்டன.

வழிப்பறி

புதுவையில் கடந்த 2019, 2020-ம் ஆண்டுகளில் அடிக்கடி வழிப்பறி சம்பவங்கள் நடந்தன. வழிப்பறி சம்பவத்தில் ஈடுபட்ட நபர்கள் பெண்களை தாக்கியும், கத்தியால் வெட்டியும் நகைகளை பறித்து சென்றனர். இதனால் பெண்கள் வெளியில் நகைகளை அணிந்து செல்லவே அச்சம் அடைந்தனர். இந்த கொள்ளையர்களை பிடிக்க முடியாமல் போலீசார் திணறி வந்தனர்.
இதைத்தொடர்ந்து வழிப்பறி கொள்ளையர்களை பிடிக்க வடக்கு பகுதி போலீஸ் சூப்பிரண்டு சுபம்கோஷ் உத்தரவின்பேரில் லாஸ்பேட்டை இன்ஸ்பெக்டர் ராஜ்குமார் தலைமையில் சப்-இன்ஸ்பெக்டர் திருமுருகன், ஏட்டு ராஜூ, போலீஸ்காரர்கள் கோவிந்தர், அரிகரன், ராஜவேலு, ஜெயக்குமார் ஆகியோரை கொண்ட தனிப்படை அமைக்கப்பட்டது. மேலும் இந்த தனிப்படையில் சைபர் கிரைம் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் சந்தோசும் இடம் பிடித்தனர்.

4 பேர் கைது

இந்த தனிப்படையினர் புதுவையில் தொடர் வழிப்பறியில் ஈடுபட்ட மதுரை ஜெய்ஹிந்த்புரத்தை சேர்ந்த கார்த்திக் (30), கந்தசாமி (33), டி.வி.எஸ். நகரை சேர்ந்த செந்தில் (30), சிவகங்கையை சேர்ந்த ஆனந்தராஜ் (24) ஆகியோரை கடந்த சில நாட்களுக்கு முன்பு கைது செய்து காலாப்பட்டு சிறையில் அடைத்தனர்.
பின்னர் அவர்களை போலீசார் காவலில் எடுத்து விசாரித்தனர். விசாரணையில் அவர்கள் லாஸ்பேட்டை, கோரிமேடு, உருளையன்பேட்டை, ரெட்டியார்பாளையம் போலீஸ் நிலைய எல்லைக்குட்பட்ட இடங்களில் 12 வழிப்பறி சம்பவங்களில் ஈடுபட்டது தெரியவந்தது.
இதுதொடர்பாக அவர்களிடம் போலீசார் ஒப்புதல் வாக்குமூலம் பெற்றனர். அவர்கள் புதுவை வந்து திலாசுப்பேட்டையை சேர்ந்த ராமு என்பவரது ஏற்பாட்டின்பேரில் புதுவையில் தங்கியிருந்ததும் தெரியவந்தது.

நகைகள் மீட்பு

இதைத்தொடர்ந்து கைதானவர்கள் கொடுத்த தகவலின்பேரில் 38 பவுன் நகைகளை போலீசார் மீட்டனர். கைதான கந்தசாமி மீது ஒரு கொலை 5 வழிப்பறி வழக்குகளும், செந்தில் மீது 3 கொலை, 3 கொலை முயற்சி, 11 வழிப்பறி வழக்குகளும், ஆனந்தராஜ் மீது கொலை வழக்கு ஒன்றும், 4 வழிப்பறி வழக்குகளும், கார்த்திக் மீது 3 கொலை வழக்கு, கடத்தல் வழக்கு ஒன்று, வழிப்பறி வழக்கு 20-ம் உள்ளது.


ரோந்து போலீசார் துப்பாக்கியுடன் செல்ல வேண்டும்
சீனியர் போலீஸ் சூப்பிரண்டு உத்தரவு
வழிப்பறியில் ஈடுபட்டவர்களை கைது செய்து நகைகளை மீட்ட போலீசாரை சீனியர் போலீஸ் சூப்பிரண்டு லோகேஸ்வரன் பாராட்டினார். இதைத் தொடர்ந்து அவர் நிருபர்களிடம் கூறியதாவது:-
புதுவையில் குற்ற சம்பவங்களில் ஈடுபடுபவர்கள் மீது போலீசார் கடும் நடவடிக்கை எடுத்து வருகின்றனர். ரெட்டியார்பாளையம் பகுதியில் நடந்த திருட்டு, வழிப்பறி சம்பவங்கள் தொடர்பாக சந்தேகப்படுபவர்களை பிடித்து விசாரித்து வருகிறோம். வாணரப்பேட்டை இரட்டை கொலை வழக்கில் இதுவரை 11 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். குற்ற சம்பவங்களை தடுக்க நகரம் முழுவதும் கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தும் திட்டம் செயல்படுத்தப்பட உள்ளது. புதுவையில் ரோந்து செல்லும் போலீசாரும் பாதுகாப்புக்கு துப்பாக்கி எடுத்து செல்ல வேண்டும்.
இவ்வாறு அவர் கூறினார்.

மேலும் செய்திகள்