புதுவை பெரிய மார்க்கெட் வியாபாரிகள் திடீர் சாலைமறியல்

புதுவை பெரிய மார்க்கெட் வியாபாரிகள் திடீர் சாலைமறியலில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.

Update: 2021-12-03 16:33 GMT
புதுச்சேரி
புதுவை பெரிய மார்க்கெட் வியாபாரிகள் திடீர் சாலைமறியலில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.

கடைகள் இடிப்பு

புதுவை பெரிய மார்க்கெட் ரங்கப்பிள்ளை வீதி பகுதியில் (12-ம் நம்பர் வாசல்) மளிகை, காய்கறி, அடிக்காசு என 20 கடைகள் இருந்தன. இந்த கட்டிடம் இடிந்து விழும் சூழலில் இருந்ததால் நகராட்சி சார்பில் அதை இடிக்க முடிவு செய்யப்பட்டது.
இதன்படி அந்த கடைகள் இடிக்கப்பட்டன. இடிபாடுகளும் அங்கிருந்து அகற்றப்பட்டது. இருந்தபோதிலும் அங்கு வியாபாரம் செய்தவர்கள் மீண்டும் வியாபாரம் செய்ய அனுமதிக்கப்படவில்லை. தொடர்ந்து அந்த வாசல் மூடப்பட்டுள்ளது.

சாலைமறியல்

இதனால் வியாபாரம் பாதிக்கப்பட்டுள்ளதாக அப்பகுதியில் வியாபாரம் செய்தவர்கள் குற்றஞ்சாட்டினர். அந்த வாசலை திறக்கக்கோரியும், தங்களை மீண்டும் அதே இடத்தில் வியாபாரம் செய்ய அனுமதிக்கக்கோரியும் இன்று ரங்கப்பிள்ளை வீதியில் தமிழர் களம் அழகர் தலைமையில் வியாபாரிகள் திடீர் சாலைமறியலில் ஈடுபட்டனர். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.
இதுகுறித்து தகவல் அறிந்த பெரியகடை போலீஸ் இன்ஸ்பெக்டர் கண்ணன் மற்றும் போலீசார் விரைந்து வந்து அவர்களுடன் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டனர். பிரச்சினை தொடர்பாக புதுச்சேரி நகராட்சி ஆணையரை சந்தித்து முறையிடுமாறு அறிவுறுத்தினார்கள்.
இதைத்தொடர்ந்து போராட்டத்தை கைவிட்ட வியாபாரிகள் நகராட்சி ஆணையரிடம் தங்கள் கோரிக்கையை வலியுறுத்தி மனு அளித்தனர்.

மேலும் செய்திகள்