தமிழகம்- கேரளா இடையே மீண்டும் பஸ் போக்குவரத்து: பயணிகள் மகிழ்ச்சி
20 மாதங்களுக்கு பின்னர் தமிழகம் - கேரளா இடையே அரசு பஸ்கள் இயக்கப்பட்டதால் தமிழக, கேரள பயணிகள் மகிழ்ச்சி அடைந்தனர்.
நாகர்கோவில்,
தமிழ்நாட்டில் கொரோனா தொற்று பரவலை கட்டுப்படுத்தும் வகையில் ,கடந்த 30ஆம் தேதி வரை தளர்வுகளுடன் கூடிய ஊரடங்கு நடைமுறையில் இருந்து வந்தது.
இதை தொடர்ந்து கொரோனா பரவல் தடுப்பு நடவடிக்கைகள் தொடர்ந்து மேற்கொள்ள வேண்டிய அவசியம் கருதியும், தமிழ்நாட்டில் வடகிழக்கு பருவமழை தீவிரமடைந்து தொடர் மழை பொழிந்து வருகின்ற சூழ்நிலையை கருத்தில் கொண்டும், பொதுமக்கள் நலன் கருதி நடைமுறையிலுள்ள ஊரடங்கு கட்டுப்பாடுகள், வருகிற 15ஆம் தேதி வரை நீட்டித்து உத்தரவிடப்பட்டுள்ளது.
இந்த சூழலில் ஆந்திர பிரதேசம் , கர்நாடகா மாநிலங்களுக்கு இடையே பொதுப்போக்குவரத்து அனுமதிக்கப்பட்டுள்ளது போன்று கேரள மாநிலத்திற்கும் பொதுப்போக்குவரத்து அனுமதிக்கப்படுவதாக தமிழக அரசு நேற்று அறிவித்தது. இதைய்டுத்து, சுமார் 20 மாதங்களுக்குப் பிறகு தமிழகத்தில் இருந்து கேரளாவுக்கு பேருந்துகள் இயங்கத்தொடங்கியுள்ளன.
நாகர்கோவில் வடசேரி பேருந்து நிலையத்தில் இருந்து இன்று காலையிலேயே கேரளாவிற்கு பேருந்துகள் புறப்பட்டு சென்றன. இதைப்போல் திருவனந்தபுரம் பேருந்து நிலையத்தில் இருந்து நாகர்கோவிலுக்கு பேருந்துகள் இயக்கப்பட்டன.
கேரளாவில் இருந்து வந்த பேருந்துகள் ஊரடங்கு நேரத்தில் களியக்காவிளையுடன் நிறுத்தப்பட்டு வந்தது. ஆனால் இன்று பேருந்துகள் இயங்க தடை நீங்கியதை தொடர்ந்து நாகர்கோவில் வரை கேரள பேருந்துகள் வந்தன. 20 மாதங்களுக்கு பின்னர் தமிழகம் - கேரளா இடையே அரசு பேருந்துகள் இயக்கப்பட்டதால் தமிழக, கேரள பயணிகள் மகிழ்ச்சி அடைந்தனர்.