தண்ணீர் கலந்த பெட்ரோல் விற்பனை... பெட்ரோல் நிலையத்தை முற்றுகையிட்ட வாகனஓட்டிகள்...
திருவள்ளூர் ஆயில் மில் பகுதியில் பெட்ரோல் நிலையம் ஒன்றில் தண்ணீர் கலந்த பெட்ரோலை வாகனங்களுக்கு நிரப்பியதால் வாகனங்கள் பழுதானது. இதனால் பெட்ரோல் நிலையத்தை முற்றுகையிட்டு வாகன ஓட்டிகள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
திருவள்ளூர்,
திருவள்ளூர் மாவட்டத்தில் ஆயில் மில் பகுதியில் பெட்ரோல் நிலையம் ஒன்று உள்ளது. இங்கு நேற்று 100-க்கும் மேற்பட்ட வாகன ஓட்டிகள் தங்கள் வாகனங்களுக்கு பெட்ரோல் நிரப்பி சென்றனர். சிறிது தூரம் சென்றதும் வாகனங்கள் பழுதாகி நின்றது. இதை தொடர்ந்து வாகனங்களை பழுதுபார்க்கும் கடைக்கு கொண்டு சென்றனர். அப்போது பெட்ரோலுடன் தண்ணீர் கலந்து இருப்பது தெரியவந்தது.
இதனால் அதிர்ச்சி அடைந்த வாகன ஓட்டுகள் பெட்ரோல் நிலையத்தை முற்றுகையிட்டு போராட்டம் நடத்தினர். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது. இது குறித்து தகவல் அறிந்ததும் திருவள்ளூர் டவுன் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்தனர்.
பின்னர் விசாரித்தபோது பெட்ரோலுடன் தண்ணீர் கலந்து இருப்பது உறுதி செய்யப்பட்டது. மேலும் பாதிக்கப்பட்டவர்கள் பெட்ரோலுக்கான பணத்தை திருப்பி தர வேண்டும் என கோரிக்கை விடுத்தனர். பெட்ரோல் நிலைய ஊழியர்களும் பணத்தை தருவதாக உறுதியளித்தனர். இதை தொடர்ந்து அந்த பெட்ரோல் நிலையத்தில் பெட்ரோல் நிரப்புவது தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்பட்டது.