அ.தி.மு.க செயற்குழு கூட்டம்: தி.மு.க. அரசை கண்டித்து போராட்டம் உள்பட 13 தீர்மானங்கள்
அ.தி.மு.க செயற்குழு கூட்டத்தில் தி.மு.க. அரசை கண்டித்து போராட்டம் நடத்துவது உள்பட 13 முக்கிய தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
சென்னை,
தேர்தல் ஆணையத்தால் அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சிகள் ஆண்டுக்கு ஒரு முறை பொதுக்குழுவையும், 2 முறை செயற்குழுவையும் கூட்ட வேண்டும் என்ற விதி உள்ளது. அந்த வகையில் அ.தி.மு.க. பொதுக்குழு மற்றும் செயற்குழு கூட்டம் கடந்த ஜனவரி மாதம் 9-ந் தேதி நடைபெற்றது.
சட்டமன்ற தேர்தலுக்கு முன்பாக நடைபெற்ற இந்த கூட்டத்தில், கூட்டணி குறித்து ஆலோசிக்கப்பட்டது. இந்தநிலையில், அ.தி.மு.க. செயற்குழு கூட்டம் 2-வது முறையாக இன்று கூடியது. சென்னை ராயப்பேட்டையில் உள்ள அ.தி.மு.க. தலைமை அலுவலகமான எம்.ஜி.ஆர். மாளிகையில் காலை 10 மணிக்கு இந்த கூட்டம் தொடங்கியது.
கட்சியின் ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம், இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிசாமி ஆகியோர் தலைமையில் கூட்டம் நடைபெற்றது. மாநில நிர்வாகிகள், மாவட்ட செயலாளர்கள், எம்.பி.க்கள், எம்.எல்.ஏ.க்கள், செயற்குழு உறுப்பினர்கள் என சுமார் 300க்கும் மேற்பட்டவர்கள் கலந்து கொண்டனர்.
இந்நிலையில் கூட்டத்தில் அ.தி.மு.க. தற்காலிக அவைத் தலைவராக தமிழ்மகன் உசேன் நியமனம் செய்யப்பட்டார். அ.தி.மு.க.வில் இருந்து அன்வர் ராஜா நீக்கப்பட்ட நிலையில் சிறுபான்மை சமூகத்தைச் சேர்ந்த தமிழ்மகன் உசேனுக்கு அவைத் தலைவர் பதவி கிடைத்துள்ளது.
அவைத் தலைவர் தேர்வைத் தொடர்ந்து செயற்குழு கூட்டத்தில், 11 தீர்மானங்கள், 1 சிறப்பு தீர்மானம் மற்றும் 1 இரங்கல் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
அடிப்படை உறுப்பினர்களால்தான் ஒருங்கிணைப்பாளரும், இணை ஒருங்கிணைப்பாளரும் தேர்ந்தெடுக்கப்படுவர் என்ற புதிய விதியை மாற்றவோ, திருத்தவோ முடியாது என அ.தி.மு.க. அமைப்பு விதியில் திருத்தம் செய்ய தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
மேலும் 13 முக்கிய தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. அதுபற்றிய விவரம் வருமாறு:-
* எம்.ஜி.ஆர். கண்ட மகத்தான மக்கள் இயக்கமாம் அ.தி.மு.க. பொன்விழா கொண்டாட்டங்களை நாடு, நகரமெங்கும்; பட்டி, தொட்டியெங்கும் எழுச்சியுடன் கொண்டாட கழக உடன்பிறப்புகளுக்கு அன்பு அழைப்பு விடுப்பது.
* நடந்து முடிந்த சட்டமன்றப் பொதுத்தேர்தலில், அ.தி.மு.க. 66 இடங்களையும், கழக கூட்டணிக் கட்சிகள் 9 இடங்களையும், ஆக மொத்தம் 75 இடங்களில் வெற்றி பெறும் வகையில் உழைத்திட்ட, கழக முன்னணியினருக்கும், கழக உடன்பிறப்புகளுக்கும் பாராட்டுக்கள். கழகத்தோடு இணைந்து தேர்தல் பணியாற்றிய கூட்டணிக் கட்சியினருக்கும், தோழமை கட்சியினருக்கும், இயன்ற வகைகளில் எல்லாம் உடன் உழைத்த, உதவிய பல்வேறு இயக்கங்களுக்கும் நெஞ்சார்ந்த நன்றி தெரிவிப்பது.
* சட்டமன்ற தேர்தலில் பல்வேறு போலியான வாக்குறுதிகளை பொதுமக்களுக்கு அளித்து, ஆட்சிப் பொறுப்புக்கு வந்திருக்கும் தி.மு.க.வின் நேர்மையற்ற பிரச்சார முறைகளுக்குக் கண்டனம் தெரிவிப்பது.
* ஏழை, எளிய உழைக்கும் மக்கள்; பெண்கள் மற்றும் மாணவர்கள் நலன் குறித்த வாக்குறுதிகளை உறுதியாய் நிறைவேற்றுவதாகக் கூறிய தி.மு.க. அந்த வாக்குறுதிகளை உடனடியாக நிறைவேற்றவும், அந்த வாக்குறுதிகள் எப்பொழுது நடைமுறைப்படுத்தப்படும் என்பதை கால அட்டவணை மூலம் உடனடியாகத் தெரிவிக்க வற்புறுத்தியும்; அவ்வாறு தெரிவிக்காவிடில் மக்களைத் திரட்டி மாபெரும் போராட்டம் நடத்தப்படும்.
* தி.மு.க. ஆட்சிக்கு வந்த நாள் முதல், தமிழ்நாடு முழுவதும் நடைபெற்று வரும் குற்றச்செயல்கள்; கொலை, கொள்ளைகள்; வழிப்பறி சம்பவங்கள்; போலீசாருக்கே பாதுகாப்பற்ற நிலை; வணிகர்கள் மீதான தாக்குதல்கள்; பெண்களுக்கு இழைக்கப்படும் அநீதிகள் உள்ளிட்ட அச்சமூட்டும் அடாவடி செயல்களை அறவே ஒழிக்க தி.மு.க. அரசு முன்வர வேண்டும். சட்டம் ஒழுங்கை நிலைநாட்டுவதில் தோல்வி அடைந்திருக்கும் தி.மு.க. அரசுக்குக் கண்டனம் தெரிவித்துக்கொள்கிறோம்.
* வடகிழக்கு பருவமழையால் தமிழ்நாடு முழுவதும் லட்சக்கணக்கான ஏக்கரில் பயிரிடப்பட்டிருந்த நெற்பயிர்கள் நீரில் மூழ்கியதன் காரணமாகவும்; வாழை, மரவள்ளிக்கிழங்கு, மக்காச்சோளம், கம்பு உள்ளிட்ட பிற பயிர் வகைகளும் பெருமளவு பாதிப்படைந்துள்ளதன் காரணமாகவும் தங்கள் வாழ்வாதாரத்தை இழந்துள்ள விவசாயிகளுக்கும்; மழை வெள்ளத்தால் சேதம் அடைந்துள்ள வீடுகள் மற்றும் உயிரிழந்த கால்நடைகளின் உரிமையாளர்களுக்கும், உரிய இழப்பீட்டுத் தொகையை உடனடியாக வழங்கிட தி.மு.க. அரசை வலியுறுத்தல். மழை வெள்ள பாதிப்புகளை முன் ஏற்பாடுகள் மூலம் தடுக்கத் தவறிய தி.மு.க. அரசுக்குக் கண்டனம் தெரிவிப்பதுடன் மழை, வெள்ள நிவாரணப் பணிகளை விரைந்து மேற்கொண்டு, மக்களின் துயர்துடைக்க திமுக அரசு விரைந்து செயல்பட வலியுறுத்துகிறோம்.
* நடந்து முடிந்த 9 மாவட்டங்களுக்கான ஊரக உள்ளாட்சித் தேர்தலில், ஜனநாயகத்தை குழி தோண்டிப் புதைக்கும் வகையில் அராஜகத்தைக் கட்டவிழ்த்து விட்டும், பல்வேறு முறைகேடுகளை அரங்கேற்றியும் வெற்றி பெற்றிருக்கும் தி.மு.க.வுக்குக் கண்டனம்.
விரைவில் நடைபெற உள்ள நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தல்களில், அ.தி.மு.க. உடன்பிறப்புகள் கடுமையாக உழைக்கவும்; தி.மு.க.வின் முறைகேடுகளைத் தடுக்கத் தேவையான முன் ஏற்பாடுகளைச் செய்யவும் அறிவுறுத்துதல்.
எம்.ஜி.ஆர்., அம்மா ஆகியோர் வழியில் அ.தி.மு.க.வை கட்டிக்காத்து, ஒற்றுமை பேணி, எதிர்கால தேர்தல்களில் மாபெரும் வெற்றிபெற, கழக முன்னோடிகளின் கரங்களை வலுப்படுத்துவோம் என்பது போன்ற தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளன.