சாலை விபத்து மற்றும் நீரில் மூழ்கி உயிரிழந்த 19 பேர் குடும்பத்துக்கு தலா ரூ.1 லட்சம் நிவாரண நிதி - எடப்பாடி பழனிசாமி அறிவிப்பு
சாலை விபத்து மற்றும் நீரில் மூழ்கி உயிரிழந்த 19 பேர் குடும்பத்துக்கு தலா ரூ.1 லட்சம் நிவாரண நிதி வழங்குவதாக முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி அறிவித்துள்ளார்.
சென்னை,
முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-
தூத்துக்குடி மாவட்டம், கோவில்பட்டி வட்டம், தோணுகால் கிராமத்தில் தேங்கியிருந்த மழைநீரில் நாலாட்டின்புதூரைச் சேர்ந்த மாரிக்கனியின் மகன் சிறுவன் ஜெஸ்லின் நீரில் மூழ்கி உயிரிழந்தார் என்ற செய்தியையும்; கன்னியாகுமரி மாவட்டம், கிள்ளியூர் வட்டம், தேங்காப்பட்டணம் கிராமத்தைச் சேர்ந்த வர்க்கீசின் மனைவி பாத்திமா ராணி சாலை விபத்தில் உயிரிழந்தார் என்ற செய்தியையும்; கிள்ளியூர் வட்டம், பாலூர் கிராமத்தைச் சேர்ந்த செபஸ்தியானின் மகன் ஏசுதாஸ் கிணற்றில் தவறி விழுந்து உயிரிழந்தார் என்ற செய்தியையும் அறிந்து நான் மிகுந்த வேதனை அடைந்தேன்.
கிள்ளியூர் வட்டம், ஏழுதேசம் கிராமத்தைச் சேர்ந்த நசரேயனின் மகன் பிரடி என்ற பெறின் மீன்பிடி பணியின்போது, பலத்த கடல் அலையின் காரணமாக கடலில் தவறி விழுந்து உயிரிழந்தார் என்ற செய்தியையும்; ஈரோடு மாவட்டம், சத்தியமங்கலம் வட்டம், மாதம்பாளையம் கிராமத்தைச் சேர்ந்த சத்தியகுமாரின் மகன் மவுலி மற்றும் முருகனின் மகன் ஜீவானந்தம் மற்றும் ரங்கநாதனின் மகன் திலீப்குமார் ஆகிய 3 நபர்கள் குட்டையில் குளிக்கும்போது, நீரில் மூழ்கி உயிரிழந்தனர் என்ற செய்தியையும் அறிந்து நான் மிகுந்த வேதனை அடைந்தேன்.
சத்தியமங்கலம் வட்டம், பவானிசாகர் உள்வட்டம், முடுக்கன்துறை கிராமத்தைச் சேர்ந்த திருமனின் மகன் பழனி முடுக்கன்துறை பரிசல் துறை அருகே குளிக்க சென்றபோது எதிர்பாராத விதமாக நீரில் மூழ்கி உயிரிழந்தார் என்ற செய்தியையும்; சத்தியமங்கலம் வட்டம், புஞ்சைபுளியம்பட்டி கிராமத்தைச் சேர்ந்த பொன்னுசாமியின் மகன் அன்பரசன் சாலை விபத்தில் உயிரிழந்தார் என்ற செய்தியையும்; சேலம் மாவட்டம், மேட்டூர் வட்டம், விருதாசம்பட்டி கிராமத்தைச் சேர்ந்த சின்னாகவுண்டரின் மகன் பழனியப்பன் சாலை விபத்தில் உயிரிழந்தார் என்ற செய்தியையும் அறிந்து நான் மிகுந்த வேதனை அடைந்தேன்.
வாழப்பாடி வட்டம், சிங்கிபுரம் கிராமத்தைச் சேர்ந்த மணியின் மனைவி சாந்தி மரம் விழுந்து உயிரிழந்தார் என்ற செய்தியையும்; விழுப்புரம் மாவட்டம், செஞ்சி வட்டம், நல்லாண்பிள்ளைபெற்றாள் கிராமத்தைச் சேர்ந்த மாசிலாமணியின் மகன் கதிரவன் சுவர் இடிந்து விழுந்து உயிரிழந்தார் என்ற செய்தியையும்; விழுப்புரம் மாவட்டம் மற்றும் வட்டம், கண்டம்பாக்கம் கிராமத்தைச் சேர்ந்த ஆறுமுகத்தின் மகன் ரஞ்சித் மற்றும் மணிகண்டனின் மகன் முருகன் ஆகிய இருவரும் ஏரியில் குளிக்கும்போது, எதிர்பாராத விதமாக நீரில் மூழ்கி உயிரிழந்தனர் என்ற செய்தியையும் அறிந்து நான் மிகுந்த வேதனை அடைந்தேன்.
திருப்பூர் மாவட்டம், அவிநாசி வட்டம், பழங்கரை கிராமத்தைச் சேர்ந்த தமிழ்செல்வனின் மகன்கள் அகிலேஸ்வரன் மற்றும் பாலன் ஆகிய இருவரும் பாறைக்குழியில் குளிக்க சென்றபோது எதிர்பாராத விதமாக நீரில் மூழ்கி உயிரிழந்தனர் என்ற செய்தியையும்; திருவள்ளூர் மாவட்டம், பொன்னேரி வட்டம், கூனங்குப்பம் கிராமத்தைச் சேர்ந்த அய்யாவுவின் மகன் பாலன் மீன்பிடி பணியின்போது, வலையில் சிக்கி உயிரிழந்தார் என்ற செய்தியையும் அறிந்து நான் மிகுந்த வேதனை அடைந்தேன்.
ஆவடி வட்டம், வெள்ளானூர் கிராமத்தைச் சேர்ந்த கமலக்கண்ணனின் மகன் மோகன்ராஜ் என்பவர் கழிவுநீர் தொட்டில் விழுந்து உயிரிழந்தார் என்ற செய்தியையும்; புதுக்கோட்டை மாவட்டம், விராலிமலை வட்டம், விராலிமலையைச் சேர்ந்த விவேகானந்தனின் மகன் காத்தவராயன் சாலை விபத்தில் உயிரிழந்தார் என்ற செய்தியையும் அறிந்து நான் மிகுந்த வேதனை அடைந்தேன்.
சாலை விபத்து மற்றும் நீரில் மூழ்கி உயிரிழந்த 19 நபர்களின் குடும்பங்களுக்கும் எனது ஆழ்ந்த இரங்கலையும், அனுதாபத்தையும் தெரிவித்துக்கொள்கிறேன். மேற்கண்ட சம்பவங்களில் உயிரிழந்த 19 நபர்களின் குடும்பங்களுக்கு தலா ரூ.1 லட்சம் முதல்-அமைச்சரின் பொது நிவாரண நிதியில் இருந்து வழங்க நான் உத்தரவிட்டுள்ளேன்.
இவ்வாறு அவர் கூறியுள்ளார்.