ரேஷன் அட்டைதாரர்களுக்கு தலா ரூ.2,500 பொங்கல் பரிசு; ஜனவரி 4 முதல் வழங்கப்படும் - எடப்பாடி பழனிசாமி அறிவிப்பு

சேலம் மாவட்டம் எடப்பாடி சட்டசபை தொகுதிக்கு உட்பட்ட இருப்பாளி ஊராட்சியில் அம்மா மினி கிளினிக் திறப்பு விழா மற்றும் அரசு நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா நேற்று நடைபெற்றது.

Update: 2020-12-19 22:56 GMT
சேலம்,

விழாவிற்கு முதல்- அமைச்சர் எடப்பாடி பழனிசாமி தலைமை தாங்கி, புதிதாக அமைக் கப்பட்ட அம்மா மினி கிளினிக்கை ரிப்பன் வெட்டியும், குத்துவிளக்கேற்றி வைத்தும் தொடங்கிவைத்தார். இதைத்தொடர்ந்து நடந்த விழாவில் பல்வேறு துறைகள் சார்பில் புதிய திட்டப்பணிகளை தொடங்கி வைத்தும், முடிவுற்ற திட்டப்பணிகளை திறந்து வைத்தும் முதல்- அமைச்சர் எடப்பாடி பழனிசாமி பேசினார்.

அப்போது அவர் பேசியதாவது:-

தமிழகத்தில் ஏழை, எளிய மக்களுக்கு அவரவர் வசிக்கும் பகுதிகளிலேயே சிறப்பான மருத்துவ சிகிச்சை கிடைக்க வேண்டும் என்ற எண்ணத்தில் தமிழகம் முழுவதும் தற்போது 2 ஆயிரம் அம்மா மினி கிளினிக்குகள் தொடங்கப்பட்டு வருகிறது. இதன் மூலம் மக்களுக்கு காய்ச்சல், தலைவலி உள்ளிட்ட பல்வேறு சிறிய நோய்களுக்கு உடனடியாக சிகிச்சை பெற முடியும்.

அம்மா மினி கிளினிக்கில் ஒரு டாக்டர், ஒரு செவிலியர், ஒரு மருத்துவ உதவியாளர் ஆகியோர் இருப்பார்கள். அவர்கள் பொதுமக்களுக்கு சிகிச்சை மேற்கொண்டு தேவைப்படும் பட்சத்தில் மேல் சிகிச்சைக்கு சேலம் அரசு தலைமை மருத்துவமனைக்கு அனுப்பி வைப்பார்கள்.

எடப்பாடி சட்டசபை தொகுதியில் மட்டும் 4 இடங்களில் அம்மா மினி கிளினிக் தொடங்கப்பட்டுள்ளது. மேலும் எடப்பாடி, மகுடஞ்சாவடி, கொங்கணாபுரம் ஆகிய ஒன்றிய பகுதி மக்களுக்கு கூட்டு குடிநீர் திட்டம் மூலம் தங்குதடையின்றி பாதுகாக்கப்பட்ட காவிரி குடிநீர் வழங்கப்பட்டு வருகிறது.

இதுதவிர பொதுமக்கள் வைத்த கோரிக்கைகள் அனைத்தும் நிறைவேற்றி தரப்பட்டுள்ளது. பள்ளிகள் தரம் உயர்வு, புதிய ரேஷன் கடை, குடிநீர் வசதி, தொகுப்பு வீடுகள், பசுமை வீடுகள், கிராமப்புற சாலைகள் சீரமைப்பு உள்ளிட்ட பல்வேறு திட்டங்கள் செயல்படுத்தப்பட்டு உள்ளது.

இந்த பகுதி வறட்சியான பகுதி ஆகும். எனவே மேட்டூர் அணையில் இருந்து வெளியேறும் உபரிநீரை இந்த பகுதிகளில் இருக்கும் வறண்ட ஏரிகளுக்கு திருப்பிவிட வேண்டும் என்று மக்கள் கோரிக்கை வைத்தார்கள். அவர்களது கோரிக்கையை ஏற்று ரூ.568 கோடியில் வறண்ட 100 ஏரிகளுக்கு நீரை நிரப்பும் திட்டம் என்னால் தொடங்கி வைக்கப்பட்டது.

தற்போது அந்த பணிகள் முழு வீச்சில் நடைபெற்று வருகிறது. நீட் தேர்வினால் அரசு பள்ளி மாணவர்கள் மருத்துவப் படிப்பில் சேர முடியாமல் தவித்தனர். இதனை கருத்தில் கொண்டு அரசு பள்ளி மாணவர்களுக்கு மருத்துவ சேர்க்கையில் 7.5 சதவீதம் உள் ஒதுக்கீடு வழங்கி ஆணை பிறப்பித்தேன்.

இதனால் இந்த ஆண்டு 313 அரசு பள்ளி மாணவர்களுக்கு மருத்துவ இடம் கிடைத்துள்ளது. தமிழகத்தில் புதிதாக 11 அரசு மருத்துவக்கல்லூரிகள் தொடங்கப்பட்டுள்ளது. இதன்மூலம் அடுத்த ஆண்டு கூடுதலாக 130 மருத்துவ இடங்கள் கிடைக்கும். அதாவது 430 மருத்துவ சீட்டு கிடைக்கும். இதன் மூலம் ஏழை, எளிய மாணவர்களின் மருத்துவ கனவு நனவாகியுள்ளது.

தைப்பொங்கல் பண்டிகை தமிழர் திருநாளாக கொண்டாடப்பட்டு வருகிறது. ஒவ்வொரு ஆண்டும் தைப்பொங்கல் திருநாளை தமிழக மக்கள் சிறப்பாக கொண்டாட வேண்டும் என்பதற்காக பரிசு தொகுப்பு வழங்கப்பட்டு வருகிறது.

அதேநேரத்தில் தற்போது கொரோனா வைரஸ் காரணமாக ஏராளமானோர் வேலைவாய்ப்பை இழந்துள்ளனர். புயல் மற்றும் வெள்ளத்தால் விவசாயிகள் பாதிக்கப்பட்டுள்ளனர். அதனை கருத்தில் கொண்டும், தமிழக மக்கள் தைத்திருநாள் பொங்கல் பண்டிகையை சிறப்பாக கொண்டாட வேண்டும் என்பதற்காகவும் வருகிற பொங்கல் பண்டிகைக்கு அரிசி குடும்ப அட்டைதாரர்களுக்கு ரூ.2,500 பொங்கல் பரிசு வழங்கப்படும் என்பதை மகிழ்ச்சியுடன் தெரிவித்துக் கொள்கிறேன்.

தமிழகத்தில் 2 கோடியே 6 லட்சம் அரிசி குடும்ப அட்டைதாரர்கள் உள்ளனர். அவர்கள் அனைவருக்கும் பொங்கல் பரிசு ரூ.2,500 வழங்கப்படும். அத்துடன் ஒரு கிலோ பச்சரிசி, ஒரு கிலோ சர்க்கரை, ஒரு முழு கரும்பு, முந்திரி, திராட்சை, ஏலக்காய் ஆகியவை வழங்கப்படும். மேலும் இலவச வேட்டி- சேலையும் வழக்கம் போல் வழங்கப்படும். இந்த பொருட் களை கொண்டு செல்ல துணிப்பை வழங்கப்படும்.

வருகிற ஜனவரி 4-ந் தேதி முதல் இந்த திட்டம் அமல்படுத்தப்படும். வீடு, வீடாக அரிசி குடும்ப அட்டைதாரர்களுக்கு டோக்கன் வழங்கப்படும். அதில் என்ன தேதியில் யார் வரவேண்டும் என்று குறிப்பிடப்பட்டிருக்கும். அந்த நாட்களில் அவர்கள் சம்பந்தப்பட்ட ரேஷன் கடைக்குசென்று பொங்கல் பரிசு தொகுப்பை பெற்றுக்கொள்ளலாம். இது உங்கள் அரசு. மக்களுக்கு எது தேவையோ? அதை கண்டறிந்து பூர்த்தி செய்கிற அரசு. இதனால் உங்கள் அன்பு எப்போதும் எங்களுக்கு தேவை.

இவ்வாறு முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி பேசினார். விழாவில் மாவட்ட கலெக்டர் ராமன், எம்.பி., எம்.எல்.ஏ.க்கள் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

மேலும் செய்திகள்