சேலத்தில் சொந்த தொகுதியில் பிரச்சாரத்தை தொடங்கினார் முதலமைச்சர் பழனிசாமி

சேலத்தில் தனது சொந்த தொகுதியில் நடந்து சென்று முதற்கட்ட தேர்தல் பிரசாரத்தை முதலமைச்சர் பழனிசாமி தொடங்கினார்.

Update: 2020-12-19 07:41 GMT
சேலம்,

2021 சட்டசபை தேர்தலையொட்டி இன்று முதல் எனது சொந்த தொகுதியான எடப்பாடியில் இருந்து தேர்தல் பிரசாரம் தொடங்குகிறேன் என்று முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்தார்.

இந்நிலையில் சேலத்தில் முதற்கட்ட தேர்தல் பிரசாரத்தை முதலமைச்சர் பழனிசாமி தொடங்கினார். பெரிய சோரகை கிராம கோவிலில் சாமி தரிசனம் செய்த பிறகு பிரசாரத்தை தொடங்கினார். தனது சொந்த தொகுதியில் நடந்து சென்று பிரசாரத்தை மேற்கொண்டார்.  முன்னதாக சேலம் பெரிய சோரகை கிராம பெருமாள் கோவிலில் தரிசனம் செய்துவிட்டு பிரசாரத்தை தொடங்கினார்.

இதற்காக அவருக்கு பிரத்யேக வாகனம் ஏற்பாடு செய்யப்பட்டு இருந்தது. அந்த வாகனத்தில் பிரசாரத்தை துவக்கி உள்ளார்.

இதற்காக ஆயிரக்கணக்கான கட்சி தொண்டர்கள் அவரை வரவேற்கும் விதமாக வழிநெடுகிலும் தோரணம் கட்டி அதிமுக கொடிகளையும் பிளக்ஸ் பேனர்கள் மற்றும் கட் அவுட்களையும் அமைத்துள்ளனர்.

மேலும் நூற்றுக்கணக்கான பெண்கள் கையில் பூக்கள் நிறைந்த தாம்பூலத்துடன் அவரை வரவேற்றனர். அதிமுக சார்பில் முதன் முதலாக தமிழக முதல்வர் எடப்பாடி கே.பழனிசாமி தனது தேர்தல் பிரசாரத்தை துவக்கி உள்ளது, தமிழகம் முழுவதும் உள்ள அதிமுகவினருக்கு உற்சாகத்தை அளித்துள்ளது.

எடப்பாடி சட்டப்பேரவை தொகுதியை பொறுத்தவரை கடந்த காலங்களில் நடைபெற்ற தேர்தல்களில் 6 முறை அதிகமுக வெற்றி பெற்றுள்ளது. அதில் 4 முறை முதல்வர் பழனிசாமி வெற்றி பெற்றுள்ளார். 2016 பேரவைத் தேர்தலில் முதல்வர் பழனிசாமி சுமார் 99 ஆயிரம் வாக்குகள் பெற்று வெற்றி பெற்றார். இதனால் எடப்பாடி தொகு அதிமுகவின் கோட்டையாக பேசப்படுகிறது.

ஆனால் 2019 மக்களவைத் தேர்தலில் அதிமுக வேட்பாளர் சரவணன் தோல்வியை சந்தித்தார். முதல்வரின் சொந்தத் தொகுதியான எடப்பாடியிலும், சொந்த ஊரான சிலுவம்பாளையத்தில் அதிமுக வேட்பாளரை விட திமுக வேட்பாளர் பெற்ற வாக்குகள் அதிகம் என்பது குறிப்பிடத்தக்கது.

அதிமுக பிரச்சார திட்டத்தை வெளியிடாத நிலையில், முன்கூட்டியே முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி பிரசாரம் மேற்கொண்டுள்ளார். 

மேலும் செய்திகள்