இலவச ‘நாப்கின்’ வழங்கும் சுகாதார திட்டத்திற்கு ரூ.44 கோடி ஒதுக்கீடு; அரசாணை வெளியீடு
இலவச நாப்கின் வழங்கும் சுகாதார திட்டத்திற்கு ரூ.44 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டு அரசாணை வெளியிடப்பட்டு உள்ளது.
சென்னை,
தமிழக சுகாதாரம் மற்றும் குடும்ப நலத்துறையின் முதன்மை செயலாளர் டாக்டர் ஜெ.ராதாகிருஷ்ணன் வெளியிட்ட அரசாணையில் கூறியிருப்பதாவது:–
தமிழக சட்டசபையில் கடந்த மார்ச் 24ந்தேதி அவை விதி 110ன் கீழ் முதல் அமைச்சர் எடப்பாடி பழனிசாமி அறிவிப்பு ஒன்றை வெளியிட்டார். அதில் அவர், ‘‘கிராமப்புற வளரிளம் பெண்களுக்கு இடையே தன் சுத்தத்தை ஊக்குவிக்க, மாதவிலக்கு கால தன் சுகாதார திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது.
இந்த திட்டம் ரூ.37.47 கோடி செலவில் நகர்ப்புறத்தில் படிக்கும் பள்ளி மாணவிகளுக்கும் விரிவுபடுத்தப்படும். மேலும் அனைத்து அரசு மருத்துவமனைகளிலும் உள்நோயாளியாக சிகிச்சை பெறும் பெண்களுக்கும் இலவச ‘சானிடரி நாப்கின்’ வழங்கப்படும்’’ என்று குறிப்பிட்டார்.
இதுகுறித்து அரசுக்கு பொது சுகாதாரம் மற்றும் தடுப்பு மருந்து இயக்குநர் கடிதம் எழுதினார். அதில், இந்த திட்டத்தின் விரிவாக்கத்திற்காக ரூ.44.15 கோடி நிதி ஒதுக்கப்பட வேண்டும் என்று கேட்டுக்கொண்டார்.
அவரது கோரிக்கையை அரசு கவனமுடன் பரிசீலனை செய்து அந்த தொகையை அனுமதித்து அரசாணை வெளியிடப்படுகிறது. இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.