மருத்துவ படிப்பு; நிர்வாக ஒதுக்கீட்டு இடங்களுக்கான கலந்தாய்வு 19-ந் தேதி முதல் 23-ந் தேதி வரை நடக்கிறது

மருத்துவ படிப்புக்கான நிர்வாக ஒதுக்கீட்டு இடங்களுக்கான கலந்தாய்வு 19-ந் தேதி முதல் 23-ந் தேதி வரை நடக்கிறது.

Update: 2020-12-16 20:47 GMT
சென்னை, 

மருத்துவ படிப்புக்கான கலந்தாய்வு கடந்த மாதம் 18-ந் தேதி முதல் தொடங்கி நடைபெற்று வருகிறது. இடையில் நிவர் புயல் காரணமாக ஒரு வாரம் கலந்தாய்வு ஒத்திவைக்கப்பட்டு, அதன் பின்னர் கலந்தாய்வு தொடர்ந்து நடைபெறுகிறது.

அந்த வகையில் கடந்த 10-ந் தேதியுடன் பொதுப்பிரிவு மாணவர்களுக்கான கலந்தாய்வு நிறைவுபெற்றது. அதைத் தொடர்ந்து, எஸ்.சி., எஸ்.சி.ஏ., எஸ்.டி. பிரிவு மாணவர்களுக்கான கலந்தாய்வு 11-ந் தேதி தொடங்கி கடந்த 14-ந் தேதி வரை நடைபெற்றது.

அதன்படி, அரசு மற்றும் சுயநிதி மருத்துவ கல்லூரிகளில் இருந்து அரசு ஒதுக்கீட்டு இடங்களுக்கான முதல்கட்ட கலந்தாய்வு நடந்து முடிந்தது. அதில் அரசு ஒதுக்கீட்டு எம்.பி.பி.எஸ். இடங்கள் அனைத்தும் நிரம்பியநிலையில், அரசு ஒதுக்கீட்டில் உள்ள 927 பி.டி.எஸ். இடங்கள் மட்டும் காலியாக இருந்தன.

அரசு ஒதுக்கீட்டு இடங்களுக்கான கலந்தாய்வு நடைபெற்று முடிந்துவிட்ட நிலையில், அதற்கு அடுத்தபடியாக சுயநிதி மருத்துவ கல்லூரிகளில் இருக்கும் நிர்வாக ஒதுக்கீட்டு இடங்களுக்கான கலந்தாய்வு நடைபெறும். அந்த வகையில் நிர்வாக ஒதுக்கீட்டு இடங்களுக்கான கலந்தாய்வு வருகிற 19-ந் தேதி (நாளை மறுதினம்) முதல் 23-ந் தேதி (புதன்கிழமை) வரை நடைபெற இருக்கிறது. 19-ந் தேதி 2 ஆயிரத்து 7 பேருக்கும், 21-ந் தேதி ஆயிரத்து 11 பேருக்கும், 22-ந் தேதி 995 பேருக்கும், 23-ந் தேதி 958 பேருக்கும் கலந்தாய்வில் கலந்துகொள்ள அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.

மேலும் செய்திகள்