கமல்ஹாசன் இன்று குமரி வருகை நிர்வாகிகளுடன் ஆலோசனை நடத்துகிறார்
மக்கள் நீதி மய்யம் கட்சித் தலைவர் கமல்ஹாசன் இன்று குமரி மாவட்டம் வருகிறார். அவர் கட்சி நிர்வாகிகளுடன் ஆலோசனை நடத்துகிறார்.
நாகர்கோவில்,
இதுதொடர்பாக மக்கள் நீதி மய்யம் கட்சியின் குமரி கிழக்கு மாவட்ட செயலாளர் சசி என்ற ஜெயபிரபாகர், மேற்கு மாவட்ட செயலாளர் பெறி எவான்சன், மத்திய மாவட்ட செயலாளர் கண்ணன் ஆகியோர் கூட்டாக வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-
மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவர் கமல்ஹாசன் இன்று (புதன்கிழமை) குமரி மாவட்டத்தில் சுற்றுப்பயணம் மேற்கொள்கிறார். அவருக்கு மாவட்ட எல்லையான காவல்கிணறு சந்திப்பில் காலை 10 மணிக்கு மாவட்ட மக்கள் நீதி மய்யம் சார்பில் பிரமாண்ட வரவேற்பு அளிக்கப்படுகிறது.
பின்னர் அவர் 10.30 மணியளவில் அஞ்சுகிராமம் சந்திப்பிலும், 11 மணிக்கு மயிலாடி சந்திப்பிலும், 11.30 மணிக்கு சுசீந்திரம் தாணுமாலயசாமி கோவில் முன்பும், மதியம் 12 மணிக்கு நாகர்கோவில் பீச்ரோடு சந்திப்பிலும் வேனில் இருந்தபடி தெருமுனை பிரசாரம் மேற்கொள்கிறார்.
பின்னர் 12.30 மணிக்கு நாகர்கோவில் ஆசாரிபள்ளம் ரோட்டில் உள்ள லான்ஸ் மகாலில் நடைபெறும் கட்சியின் கட்டமைப்பு, மகளிர், இளைஞர் அணி மற்றும் அனைத்து அணி நிர்வாகிகள் ஆலோசனைக் கூட்டத்தில் கலந்துகொண்டு உரையாற்றுகிறார்.
பிற்பகல் 3 மணியளவில் தக்கலை சந்திப்பில் தெருமுனைக் கூட்டத்தில் உரையாற்றும் அவர், மாலை 4 மணிக்கு மார்த்தாண்டத்தில் கட்சி அலுவலகத்தை திறந்து வைத்து உரையாற்றுகிறார். பின்னர் 5 மணியளவில் தேங்காப்பட்டணம் துறைமுகத்தை பார்வையிட்டு மீனவர்களிடம் கலந்துரையாடி தனது முதற்கட்ட பிரசாரத்தை நிறைவு செய்கிறார்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.