தமிழகம் மற்றும் புதுச்சேரியில் பரவலாக மழை
தமிழகம் மற்றும் புதுச்சேரியில் பரவலாக மழை பெய்து வருகிறது.
சென்னை,
தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை கடந்த அக்டோபர் மாதம் தொடங்கியது. பருவமழை தொடங்கியதில் இருந்து தமிழகத்தில் பரவலாக மழை பெய்து வந்தது. கடந்த மாதம் (நவம்பர்) 24-ந்தேதி வங்ககடலில் உருவான நிவர் புயலும், அதன் தொடர்ச்சியாக வங்ககடலில் அடுத்து உருவான புரெவி புயல் காரணமாகவும் தமிழகத்தில் பெரும்பாலான இடங்களில் மழையும், ஒரு சில இடங்களில் கனமழையும் கொட்டியது.
அதன்பின்னர், கடந்த ஒரு வாரமாக தமிழகத்தில் வறண்ட வானிலையே பெரும்பாலான இடங்களில் நிலவி வருகிறது. இந்த நிலையில் தமிழகத்தில் வளிமண்டல மேலடுக்கு சுழற்சியால் இன்றும் (புதன்கிழமை), நாளையும் (வியாழக்கிழமை) சில இடங்களில் மழைக்கு வாய்ப்பு இருப்பதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்தது.
இந்நிலையில், வங்கக்கடலில் வளிமண்டல மேலடுக்கு சுழற்சியால் தமிழகம் மற்றும் புதுச்சேரியில் பல்வேறு இடங்களில் கனமழை பெய்து வருகிறது. திருவாரூர், மயிலாடுதுறை, தஞ்சை உள்ளிட்ட டெல்டா மாவட்டங்களிலும் விட்டு விட்டு கனமழை பெய்து வருகிறது. சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் நள்ளிரவில் பரவலாக மழை பெய்தது.