புதிய வேளாண் சட்டத்தை மத்திய அரசு திரும்ப பெற வேண்டும் - ப.சிதம்பரம்
புதிய வேளாண் சட்டத்தை மத்திய அரசு திரும்ப பெற வேண்டும் என்று காங்கிரஸ் மூத்தத் தலைவர் ப.சிதம்பரம் தெரிவித்துள்ளார்.
சென்னை,
மத்திய அரசின் 3 புதிய வேளாண் சட்டங்களால் குறைந்தபட்ச ஆதரவு விலை போன்றவை ஒழிந்து விவசாயத்துறை பெருநிறுவனங்களின் வசமாகி விடும் என்று விவசாயிகள் அச்சம் தெரிவித்து வருகின்றனர். எனவே இந்த சட்டங்களை திரும்ப பெற வலியுறுத்தி டெல்லியை முற்றுகையிட்டுள்ள பஞ்சாப், அரியானா உள்ளிட்ட பல்வேறு மாநில விவசாயிகள் இன்று 20-வது நாளாக போராட்டத்தை தொடர்ந்தனர்.
வேளாண் சட்டங்களைத் திரும்பப் பெறக்கோரி, மத்திய அரசுடன் நடத்திய பேச்சுவார்த்தைகள் அனைத்தும் தோல்வி அடைந்துள்ளது. மேலும் தொடர்ந்து போராட்டத்தைத் தீவிரப்படுத்த உள்ளதாக விவசாயிகள் தெரிவித்துள்ளனர்.
இந்நிலையில் புதிய வேளாண் சட்டத்தை மத்திய அரசு திரும்ப பெற வேண்டும் என்று காங்கிரஸ் மூத்தத் தலைவர் ப.சிதம்பரம் தெரிவித்துள்ளார்.
இதுதொடர்பாக அவர் தனது டுவிட்டரில், “ வேளாண் சட்டங்களை ரத்து செய்து, விவசாயிகளுடன் செய்துகொண்ட ஒப்பந்தத்தின் அடிப்படையில் புதிய சட்டங்களை இயற்றுவதுதான், விரைவாக முன்னெடுத்துச்செல்லும் வழி. சட்டங்களைத் திரும்பப் பெற்று, புதிதாக இயற்றுவது என்பது நன்கு அறியப்பட்ட சட்டரீதியான கருவியாகும்.
மத்திய அரசு நாம்தான் உயர்ந்தவர் என்ற சிந்தனையிலிருந்து கீழே இறங்கி, விவசாயிகளுடன் விரைவாக ஒப்பந்தத்தை செய்து கொள்ள வேண்டும். விவசாயிகளுக்கும், மத்திய அரசுக்கும் இடையிலான எந்தவொரு ஒப்பந்தம் ஏற்பட்டாலும், தேவைப்படும் புதிய மசோதா நாடாளுமன்றத்தில் அவசியம் நிறைவேற்றப்பட வேண்டும்.
டெல்லியின் கடும் குளிரில் கடந்த 20 நாட்களாக விவசாயிகள் போராடி வரும்நிலையில், அரசு தொடர்ந்து சட்டங்களை திரும்பப் பெறமுடியாது என்ற நிலைப்பாட்டில் இருப்பது அதிர்ச்சியளிக்கிறது” என்று ப.சிதம்பரம் பதிவிட்டுள்ளார்.