மு.க.ஸ்டாலின் மீதான மேலும் 3 அவதூறு வழக்குகள் ரத்து: கருத்து சுதந்திரம் என்ற பெயரில் கடுமையான விமர்சனம் கூடாது அரசியல் தலைவர்களுக்கு, ஐகோர்ட்டு அறிவுரை
மு.க.ஸ்டாலின் மீதான மேலும் 3 அவதூறு வழக்குகள் ரத்து: கருத்து சுதந்திரம் என்ற பெயரில் கடுமையான விமர்சனம் கூடாது அரசியல் தலைவர்களுக்கு, ஐகோர்ட்டு அறிவுரை
சென்னை,
மு.க.ஸ்டாலின் மீதான மேலும் 3 அவதூறு வழக்குகளை ரத்து செய்து உத்தரவிட்ட சென்னை ஐகோர்ட்டு, கருத்து சுதந்திரம் என்ற பெயரில் கடுமையான வார்த்தைகளை கொண்டு விமர்சனம் செய்யக்கூடாது என்று அரசியல் தலைவர்களுக்கு அறிவுரை வழங்கியுள்ளது.
தமிழக முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி, மறைந்த முதல்-அமைச்சர் ஜெயலலிதா உள்ளிட்டோரை அவதூறாக விமர்சித்ததாக தி.மு.க. தலைவரும், சட்டசபை எதிர்க்கட்சி தலைவருமான மு.க.ஸ்டாலின் மீது பல அவதூறு வழக்குகள் தொடரப்பட்டன. இந்த வழக்குகளை ரத்து செய்யக் கோரி சென்னை ஐகோர்ட்டில், மு.க.ஸ்டாலின் மனுக்கள் தாக்கல் செய்தார்.
இந்த வழக்குகளை கடந்த வாரம் விசாரித்த ஐகோர்ட்டு நீதிபதி என்.சதீஷ்குமார், அதில் 4 வழக்குகளை ரத்து செய்து உத்தரவிட்டார்.
மீதம் உள்ள வழக்குகள் மீதான விசாரணையை நீதிபதி தள்ளி வைத்திருந்தார்.
இந்தநிலையில், அந்த வழக்குகள் நீதிபதி என்.சதீஷ்குமார் முன்பு நேற்று விசாரணைக்கு வந்தது. அப்போது, பொதுமேடைகளில் தமிழக முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி குறித்து மு.க.ஸ்டாலின் தெரிவித்த கடுமையான கருத்துக்கள் குறித்த விவரங்களை, நீதிபதியின் கவனத்திற்கு மாநில அரசு தலைமை குற்றவியல் வக்கீல் ஏ.நடராஜன் கொண்டு வந்தார்.
மு.க.ஸ்டாலின் தெரிவித்த கருத்துக்கு கடும் அதிருப்தி தெரிவித்த நீதிபதி, இதுபோல கருத்துகள் தெரிவிப்பதை அவர் தவிர்த்து இருக்க வேண்டும். அவர் லட்சக்கணக்கான தொண்டர்களுக்கு தலைவர். அவர் தெரிவிக்கும் கருத்து தொண்டர் மத்தியில் தாக்கத்தை ஏற்படுத்தும். அரசியல் ஆதாயத்திற்காக, அரசியல் கட்சித் தலைவர்கள் தேவையற்ற கடுமையான வார்த்தைகளை பொது வெளியில் பேசுவது ஆரோக்கியமான அரசியலுக்கு அழகு அல்ல. முதல்-அமைச்சர், அமைச்சர்கள் மீதான குற்றச்சாட்டுகளுக்கு ஆதாரம் இருந்தால், அந்த ஆதாரத்துடன் நீதிமன்றத்தை தான் நாட வேண்டுமே தவிர, கருத்து சுதந்திரம் என்ற பெயரில் பொதுவெளியில் கடுமையான வார்த்தைகளை கொண்டு விமர்சனம் செய்வது பொதுமக்களிடையே தவறான தாக்கத்தை உருவாக்கும்” என்று கருத்து தெரிவித்தார்.
அவதூறு வழக்குகளை ரத்து செய்து ஐகோர்ட்டு பிறப்பிக்கும் உத்தரவுகளை, தேவையற்ற கடுமையான, கருத்துகள் தெரிவிப்பதற்கான உரிமமாக கருதக் கூடாது என்று கூறிய நீதிபதி, “தமிழக அரசு, மு.க.ஸ்டாலின் மீது தொடர்ந்த 3 அவதூறு வழக்குகளை ரத்து செய்து உத்தரவிட்டார். மேலும், 5 அவதூறு வழக்கு களை ரத்து செய்யக்கோரி மு.க.ஸ்டாலின் தாக்கல் செய்த மனுக்களை வருகிற ஜனவரி 7-ந்தேதிக்கு தள்ளி வைத்தார்.