வியாசர்பாடி, மயிலாப்பூரில் மினி கிளினிக்கை தொடங்கி வைத்தார் முதலமைச்சர் பழனிசாமி
வியாசர்பாடி, மயிலாப்பூரில் மினி கிளினிக்கை முதலமைச்சர் பழனிசாமி தொடங்கி வைத்தார்.
சென்னை,
தமிழ்நாட்டில் கொரோனா பரிசோதனையை விரைவாக மேற்கொள்ள 2 ஆயிரம் மினி கிளினிக்குகள் தொடங்கப்படும் என்று முதலமைச்சர் பழனிசாமி அறிவித்தார். அதன் தொடர்ச்சியாக, அதற்கான பணிகள் மேற்கொள்ளப்பட்டன.
இந்தநிலையில், இன்று (திங்கட்கிழமை) காலை சென்னை ராயபுரம், வியாசர்பாடி மற்றும் மயிலாப்பூர் ஆகிய பகுதிகளுக்கு முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி நேரில் சென்று மினி கிளினிக்குகளை தொடங்கி வைப்பதாக தெரிவிக்கப்பட்டது.
அதன் படி, சென்னை ராயபுரம் ஷேக் மேஸ்திரி தெருவில் அமைக்கப்பட்டுள்ள மினி கிளினிக்கை முதலமைச்சர் பழனிசாமி குத்துவிளக்கேற்றி இன்று தொடங்கி வைத்தார். முதற்கட்டமாக சென்னையில் 47 கிளினிக்குகள் பொதுமக்கள் பயன்பாட்டிற்கு வருகின்றன. தமிழகம் முழுவதும் 2000 அம்மா மினி கிளினிக்குகள் அமைக்கப்படுகிறது. இதில் முதற்கட்டமாக தமிழகம் முழுவதும் 630 கிளினிக்குகள் பொதுமக்கள் பயன்பாட்டிற்கு வருகின்றன.
அதனை தொடர்ந்து சென்னை பெரம்பூர் சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட வியாசர்பாடியில் அமைக்கப்பட்ட மினி கிளினிக் திட்டத்தை முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி ரிப்பன் வெட்டி இன்று தொடங்கி வைத்தார். அதனை தொடர்ந்து மயிலாப்பூரில் அமைக்கப்பட்டுள்ள மினி கிளினிக்கை முதலமைச்சர் பழனிசாமி தொடங்கி வைத்தார்.