நாட்டிலேயே, சுகாதாரப் பணிகளில் தமிழகம் முன்னிலை வகிக்கிறது - முதலமைச்சர் பழனிசாமி
நாட்டிலேயே, சுகாதாரப் பணிகளில் தமிழகம் முன்னிலை வகிக்கிறது என்று முதலமைச்சர் பழனிசாமி கூறினார்.
சென்னை,
தமிழகத்தில் மினி கிளினிக் திட்டத்தை முதலமைச்சர் பழனிச்சாமி சென்னை ராயபுரம் ஷேக் மேஸ்திரி தெருவில் மினி கிளினிக்கை குத்துவிளக்கேற்றி இன்று தொடங்கி வைத்தார். முதற்கட்டமாக சென்னையில் 47 கிளினிக்குகள் பொதுமக்கள் பயன்பாட்டிற்கு வருகின்றன. தமிழகம் முழுவதும் 2000 அம்மா மினி கிளினிக்குகள் அமைக்கப்படுகிறது. இதில் முதற்கட்டமாக தமிழகம் முழுவதும் 630 கிளினிக்குகள் பொதுமக்கள் பயன்பாட்டிற்கு வருகின்றன.
மினி கிளினிக் திட்டத்தை தொடங்கி வைத்த பின்னர் முதலமைச்சர் பழனிச்சாமி பேசியதாவது:-
நாட்டிலேயே, சுகாதாரப் பணிகளில் தமிழகம் முன்னிலை வகிக்கிறது. மருத்துவத் துறையில் தொடர்ந்து தமிழகம் சிறப்பாக செயல்பட்டு வருகிறது. இந்த ஆண்டு அரசு பள்ளி மாணவர்கள் 313 பேர் மருத்துவப் படிப்பில் சேர்ந்துள்ளனர்.
ஏழை மக்கள் அதிகம் வசிக்கும் பகுதிகளில் மினி கிளினிக்குகள் தொடங்கப்பட்டுள்ளது. மக்கள் அந்தந்த பகுதிகளிலேயே சிகிச்சை பெறுவதற்காக மினி கிளினிக் தொடக்கம். நோயற்ற வாழ்வை தமிழக மக்களுக்கு உருவாக்கி தருவதே அரசின் எண்ணம்.
இவ்வாறு முதலமைச்சர் பழனிச்சாமி கூறினார்.