அதிமுக மண்டல பொறுப்பாளர்கள், மாவட்ட செயலாளர்கள் ஆலோசனை கூட்டம் இன்று நடக்கிறது

அதிமுக மண்டல பொறுப்பாளர்கள், மாவட்ட செயலாளர்கள் ஆலோசனை கூட்டம் இன்று நடைபெறுகிறது.

Update: 2020-12-14 02:39 GMT
சென்னை,

தமிழக சட்டப்பேரவை பொதுத் தேர்தலுக்கு ஒருசில மாதங்களே உள்ள நிலையில், அதற்கான முன்னேற்பாடுகளில் அனைத்து கட்சிகளும் மும்முரமாக ஈடுபட்டுள்ளன. சட்டப்பேரவைத் தேர்தல் பணிகள் தொடர்பாக டிசம்பர் 14-ம் தேதி மண்டலப் பொறுப்பாளர்கள், அமைச்சர்கள், மாவட்டச் செயலாளர்கள் பங்கேற்கும் ஆலோசனைக் கூட்டம் நடைபெறவுள்ளதாக அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ. பன்னீர்செல்வம் மற்றும் இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி கே. பழனிசாமி அறிவித்தனர்.

அதன்படி, தேர்தல் முன்னேற்பாடுகள் குறித்து அதிமுக மண்டலபொறுப்பாளர்கள், அமைச்சர்கள், மாவட்ட செயலாளர்கள் ஆலோசனைக் கூட்டம் சென்னையில் உள்ள கட்சி தலைமை அலுவலகத்தில் இன்று மாலை 4.30 மணிக்கு நடைபெறுகிறது. அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம், இணை ஒருங்கிணைப்பாளர் பழனிசாமி ஆகியோர் இக்கூட்டத்துக்கு தலைமை வகிக்கின்றனர். அதிமுக மண்டல பொறுப்பாளர்கள், அமைச்சர்கள், மாவட்டச் செயலாளர்கள் பங்கேற்கின்றனர்.

கடந்த நவ.20-ம் தேதி நடந்த ஆலோசனைக் கூட்டத்தின்போது, தேர்தல் பணிகள் தொடர்பாக அவர்களுக்கு பல்வேறு ஆலோசனைகள் வழங்கப்பட்டன. இந்த தேர்தலில் பெண்களின் பங்களிப்பு அதிகம் இருக்க வேண்டும். எனவே, பெண்களுக்கான வாக்குச்சாவடிகளில் பெண் முகவர்களை நியமித்தல், பெண்களுக்கு அதிகமுக்கியத்துவம் அளிக்கும் வகையில் பூத் கமிட்டிகள் அமைத்தல் உள்ளிட்டவை குறித்தும் மாவட்டசெயலாளர்களுக்கு அறிவுறுத்தப்பட்டது.

அதன் அடிப்படையில் அவர்கள்மேற்கொண்ட பணிகள் குறித்த விவரங்களுடன் இன்றைய கூட்டத்தில் பங்கேற்குமாறு தெரிவிக்கப்பட்டுள்ளது. பிரச்சாரத்தை விரைவில் தொடங்குவது குறித்தும் இக்கூட்டத்தில் முக்கிய முடிவுகள் எடுக்கப்பட உள்ளதாக கட்சி வட்டாரங்கள் தகவல் தெரிவிக்கின்றன.

மேலும் செய்திகள்