41 தொகுதிகள் தரும் கட்சிகளுடனேயே தே.மு.தி.க.கூட்டணி - பிரேமலதா விஜயகாந்த் உறுதி

“2011-ம் ஆண்டு சட்டமன்ற தேர்தலை போல 41 தொகுதிகள் தரும் கட்சிகளுடனேயே தே.மு.தி.க. கூட்டணி அமைக்கும்”, என சென்னையில் நடந்த அக்கட்சி மாவட்ட செயலாளர்கள் கூட்டத்தில் பிரேமலதா விஜயகாந்த் பேசினார்.

Update: 2020-12-14 01:29 GMT
சென்னை:

தே.மு.தி.க. மாவட்ட செயலாளர்கள் கூட்டம், சென்னை கோயம்பேட்டில் உள்ள அக்கட்சியின் தலைமை அலுவலகத்தில் நேற்று நடந்தது. கூட்டத்துக்கு கட்சி தலைவர் விஜயகாந்த் தலைமை தாங்கினார். பொருளாளர் பிரேமலதா விஜயகாந்த், துணை செயலாளர்கள் எல்.கே.சுதீஷ், பார்த்தசாரதி உள்பட நிர்வாகிகள் முன்னிலை வகித்தனர். இந்த கூட்டத்தில் 67 மாவட்ட செயலாளர்களும் கலந்துகொண்டனர்.

சட்டமன்ற தேர்தல், கட்சிப்பணி மற்றும் களப்பணி, கூட்டணி அமைக்கலாமா? அல்லது தனித்து போட்டியிடலாமா? தே.மு.தி.க. வெற்றி வாய்ப்புள்ள தொகுதிகள் எவை? பிரசாரம் குறித்த ஏற்பாடுகள் உள்ளிட்டவை குறித்து கூட்டத்தில் ஆலோசிக்கப்பட்டது.

யாருடன் கூட்டணி?

கூட்டத்தில் பொருளாளர் பிரேமலதா விஜயகாந்த் பேசியதாவது:-

சட்டமன்ற தேர்தல் வர இன்னும் சில மாதங்களே இருக்கிறது. ஆனால் தே.மு.தி.க. தேர்தல் பணி இன்றே தொடங்கிவிட்டதாக எண்ணி கட்சி நிர்வாகிகள் எல்லா தொகுதிகளுக்கும் நேரடியாக சென்று மக்கள் பணியாற்ற வேண்டும்.

தேர்தலில் தே.மு.தி.க. நிலைப்பாடு என்ன? கூட்டணியா? அல்லது தனித்து போட்டியா? என்று பல கேள்விகள் எழுந்துள்ளது. அடுத்த மாதம் (ஜனவரி) தே.மு.தி.க. செயற்குழு-பொதுக்குழு கூட்டம் நடக்கிறது. அந்த கூட்டத்தில் தே.மு.தி.க.வின் தேர்தல் நிலைப்பாடு குறித்து விஜயகாந்த் அறிவிப்பார்.

எம்.ஜி.ஆருக்கு பிறகு விஜயகாந்த்

வயது மற்றும் உடல் சோர்வு காரணமாக விஜயகாந்த் முன்புபோல இப்போது சுறுசுறுப்பாக இல்லை. ஆனால் தேர்தல் பிரசார காலத்தின் ‘கிளைமாக்சில்’ விஜயகாந்த் தனது பிரசாரத்தை மேற்கொள்வார். மார்ச், ஏப்ரல் மாதங்களில் விஜயகாந்தின் பிரசாரம் நிச்சயம் இருக்கும்.

எம்.ஜி.ஆருக்கு பிறகு ஏழை மக்களின் வாழ்வு நலம்பெற பாடுபட்டு வருபவர், விஜயகாந்த். அதை மக்கள் புரிந்துகொண்டு தேர்தலில் வெளிப்படுத்துவார்கள்.

இவ்வாறு அவர் பேசினார்.

41 தொகுதிகள் 

மேலும் “2011-ம் ஆண்டு நடந்த சட்டமன்ற தேர்தலில் அ.தி.மு.க. கூட்டணியில் தே.மு.தி.க.வுக்கு 41 தொகுதிகள் ஒதுக்கீடு செய்யப்பட்டன. அதில் தே.மு.தி.க. மாபெரும் வெற்றி பெற்று எதிர்க்கட்சி அந்தஸ்தை பெற்றது. அதேபோல் வரவிருக்கும் சட்டமன்ற தேர்தலிலும் 41 தொகுதிகளை தரும் கட்சிகளுடன் தான் தே.மு.தி.க. கூட்டணி அமைக்கும். இல்லையெனில் தே.மு.தி.க. தனித்து களமிறங்கும். இந்த முடிவுக்கு என்ன சொல்கிறீர்கள்?”, என்று மாவட்ட செயலாளர்களிடம் பிரேமலதா விஜயகாந்த் கேட்டார்.

இந்த கருத்துக்கு மாவட்ட செயலாளர்கள் 67 பேரும் ஒருமனதாக ஆதரவு தெரிவித்தனர்.

தீர்மானங்கள்

முன்னதாக மாவட்ட செயலாளர்கள் கூட்டத்தில் ‘டெல்லியில் போராடி வரும் விவசாயிகளின் கோரிக்கையை ஏற்று, மத்திய அரசு ஒரு நிரந்தர முடிவு ஏற்படுத்திட முன்வர வேண்டும். பெட்ரோல்-டீசல் விலையை உடனடியாக குறைக்க வேண்டும். தமிழகத்தில் அனைத்து டாஸ்மாக் கடைகளையும் மூட வேண்டும் உள்பட 9 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

மேலும் செய்திகள்