தொப்பூர் சாலையை விரிவாக்கம் செய்திருந்தால் விபத்துக்களை தவிர்த்திருக்கலாம் - அன்புமணி ராமதாஸ்
தருமபுரி தொப்பூர் சாலையை விரிவாக்கம் செய்திருந்தால், விபத்துக்களை தவிர்த்திருக்கலாம் என பாமக இளைஞரணி தலைவர் அன்புமணி ராமதாஸ் கூறியுள்ளார்.
தர்மபுரி,
தர்மபுரி மாவட்டம் தொப்பூர் கணவாய் போலீஸ் குடியிருப்பு அருகே இரட்டை பாலம் பகுதியில் நேற்று ஒரு லாரியும், சரக்கு வேனும் மோதி விபத்துக்குள்ளாகி சாலையில் நின்று கொண்டு இருந்தன. இதனால் தொப்பூர் கணவாய் பகுதியில் ஏற்பட்ட போக்குவரத்து பாதிப்பால் வாகனங்கள் சாலையில் அணிவகுத்து நின்றன.
அப்போது ஆந்திராவில் இருந்து சிமெண்டு பாரம் ஏற்றிக்கொண்டு வந்த லாரி ஒன்று, போக்குவரத்து பாதிப்பால் சாலையில் அணிவகுத்து நின்ற 12 கார்கள், ஒரு சரக்கு வேன் ஆகியவை மீது அடுத்தடுத்து மோதியது. இதனால் ஏற்பட்ட இடிபாடுகளில் சிக்கி 4 பேர் உயிரிழந்தனர். மேலும் படுகாயமடைந்த 20-க்கும் மேற்பட்டோர் தர்மபுரி அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
இந்நிலையில் தர்மபுரி தொப்பூர் சாலையை விரிவாக்கம் செய்திருந்தால், இதுபோன்ற விபத்துக்களை தவிர்த்திருக்கலாம் என பாமக இளைஞரணி தலைவர் அன்புமணி கூறியுள்ளார். இந்த விபத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பத்துக்கு இரங்கல் தெரிவித்த அன்புமணி, காயமடைந்தவர்கள் விரைவில் நலம்பெற விரும்புவதாக தெரிவித்துள்ளார்.
கடந்த 2017-18 ஆம் ஆண்டில், விபத்தில்லா பகுதியாக மாற்றும் திட்டத்தை நிறைவேற்றி இருந்தால், இதுபோன்ற விபத்தை தவிர்க்கலாம் என்றும், உயிரிழந்தோரின் குடும்பத்துக்கும், காயமடைந்தவர்களுக்கும் இழப்பீடு வழங்கவும் அவர் வலியுறுத்தி உள்ளார்.