சென்னை சிவாலயங்களில் சனி பிரதோஷ வழிபாடு கோலாகலம் பக்தர்கள் சாமி தரிசனம்
சென்னை சிவாலயங்களில் சனி பிரதோஷ வழிபாடு வழிபாடு சிறப்பாக நடந்தது.
சென்னை,
ஒவ்வொரு மாதமும் வளர்பிறை மற்றும் தேய்பிறை நாட்களில் வரும் திரயோதசி நாட்களில் மாலை 4.30 மணி முதல் 6 மணி வரையில் உள்ள காலத்தை பிரதோஷ காலம் என்று முன்னோர்கள் கணித்துள்ளனர். காரணம் அன்று தான் எம்பெருமான் ஆலகால விஷத்தை உண்டு அகிலத்தை காத்தருளினார் என்று சிவபுராணம் கூறுகின்றது.
சனிப்பிரதோஷ நாளில் நந்தியை வழிபட்டால் சனி பகவானால் ஏற்படும் சகலவிதமான துன்பங்களும் மற்றும் சகல தோஷங்களும் விலகும் என்பது நம்பிக்கை.
அந்தவகையில் சென்னையில் உள்ள மயிலாப்பூர் கபாலீசுவரர் கோவில், திருவொற்றியூர் தியாகராஜசாமி கோவில், திருவேற்காடு வேதபூரீஸ்வரர் கோவில்களில் பால், தயிர், தேன், பஞ்சாமிர்தம், திருநீறு, இளநீர், சர்க்கரை, சந்தனம் உள்ளிட்ட பொருட்கள் மூலம் அபிஷேகம் நடந்தது.
பக்தர்கள் நலன் கருதி சனிபிரதோஷ வழிபாடுகள் இணையதளம் மூலம் ஒளிபரப்பப்பட்டது. புரசைவாக்கம் கங்காதீசுவரர் மற்றும் அர்த்தநாரீஸ்வரர் உள்ளிட்ட கோவில்களில் சனிபிரதோஷ வழிபாடு சிறப்பாக நடந்தது. முககவசம், சமூக இடைவெளியை பின்பற்றி பக்தர்கள் சாமி தரிசனம் செய்து சென்றனர். விழா ஏற்பாடுகளை விழா குழுவினர் செய்து இருந்தனர்.