7 மாவட்டங்களில் கமல்ஹாசன் சூறாவளி சுற்றுப்பயணம்- மதுரையில் நாளை தொடங்குகிறார்

மக்கள் நீதி மய்யத்தின் தலைவர் நடிகர் கமல்ஹாசன் 7 மாவட்டங்களில் தனது முதல் கட்ட சுற்றுப்பயணத்தை மதுரையில் நாளை தொடங்குகிறார்.

Update: 2020-12-11 23:28 GMT
சென்னை, 

தமிழக சட்டமன்ற தேர்தலுக்கு இன்னும் சில மாதங்களே உள்ள நிலையில், தேர்தலை எதிர்கொள்ள அனைத்து கட்சிகளும் தயாராகி வருகிறது. அந்தவகையில், அ.தி.மு.க., தி.மு.க.வில் தேர்தல் பணிக்குழு, தேர்தல் அறிக்கை குழுக்கள் அமைக்கப்பட்டு தேர்தல் பணிகளை அக்கட்சிகள் முடுக்கி விட்டுள்ளது. சட்டசபை தேர்தலில் ரஜினிகாந்தும் களம் காண உள்ள நிலையில், எப்போதும் இல்லாத அளவில் தமிழக தேர்தல் களம் கடும் போட்டியை சந்திக்கும் நிலை உருவாகி உள்ளது.

தற்போது அரசியல் கட்சிகள் மக்களை சந்திக்க தயாராகி வருகிறார்கள். அதன்படி, கமல்ஹாசன் தலைமையிலான மக்கள் நீதி மய்யம் தனது முதல் கட்ட தேர்தல் பிரசாரத்தை நாளை (ஞாயிற்றுக்கிழமை) தொடங்க இருக்கிறது. “சீரமைப்போம் தமிழகத்தை” என்ற பெயரில் அக்கட்சியின் தலைவர் கமல்ஹாசன் முதல் கட்ட பிரசாரத்தை மதுரையில் இருந்து தொடங்குகிறார். தொடர்ந்து, 14, 15, 18 ஆகிய தேதிகளில் தேனி, திண்டுக்கல், விருதுநகர், திருநெல்வேலி, தூத்துக்குடி மற்றும் கன்னியாகுமரி ஆகிய மாவட்டங்களில் அவர் சூறாவளி சுற்றுப்பயணம் செய்து மக்களை சந்திக்க இருக்கிறார்.

இதற்காக சென்னையில் இருந்து விமானம் மூலம் மதுரை சென்றடையும் கமல்ஹாசன் நாளை (ஞாயிற்றுக்கிழமை) 3 கூட்டங்களில் கலந்து கொள்கிறார். கட்சி நிர்வாகிகள், பெண்கள் அமைப்பினருடன் அவர் கலந்துரையாடுகிறார். இதன் பின்னர் தொழில் முனைவோருடனும் அவர் கலந்து ஆலோசிக்கும் நிகழ்ச்சி நடைபெறுகிறது.

இதன் பின்னர் 14-ந் தேதி காலையில் மதுரை மற்றும் தேனி மாவட்டங்களில் திறந்த வேனில் கமல்ஹாசன் பிரசாரம் மேற்கொள்கிறார். திண்டுக்கல், தேனி, ஆண்டிப்பட்டி உள்ளிட்ட பல்வேறு இடங்களுக்கு திறந்த வேனிலேயே செல்லும் கமல்ஹாசன் குறிப்பிட்ட பகுதிகளில் தெருமுனைக் கூட்டங்களில் பங்கேற்று பேசவும் திட்டமிடப்பட்டுள்ளது.

15-ந் தேதி நெல்லை, தூத்துக்குடி மாவட்டங்களிலும், கடைசி நாளான 18-ந்தேதி கன்னியாகுமரி மாவட்டத்தில் பிரசாரம் மேற்கொள்கிறார். கன்னியாகுமரி மாவட்டத்தின் பல்வேறு இடங்களுக்கு சென்று திறந்த வேனில் சென்று மக்களை கமல்ஹாசன் சந்திக்கிறார். மீனவர்களை சந்தித்து பேசவும் கமல்ஹாசன் திட்டமிட்டுள்ளார். 7 மாவட்டங்களில் கமல்ஹாசன் சுற்றுப்பயணம் செய்யும் இடங்கள் விவரம் இன்று (சனிக்கிழமை) அதிகாரபூர்வமாக அறிவிக்கப்படுகிறது.

மேலும் செய்திகள்