ஜே.பி.நட்டா 30-ந் தேதி தமிழகம், புதுச்சேரி வருகை எல்.முருகன் தகவல்

பா.ஜ.க. தேசிய தலைவர் ஜே.பி.நட்டா வருகிற 30, 31 மற்றும் ஜனவரி 1-ந் தேதிகளில் தமிழகம் மற்றும் புதுச்சேரிக்கு வருகை தர உள்ளதாக எல்.முருகன் தெரிவித்தார்.

Update: 2020-12-11 21:19 GMT
சென்னை,

தமிழக பா.ஜ.க. தலைமை அலுவலகமான சென்னை தியாகராயநகரில் உள்ள கமலாலயத்தில் பாரதியார் பிறந்ததினம் நேற்று கொண்டாடப்பட்டது. இதையொட்டி, பாரதியாரின் உருவப்படம் மலர்களால் அலங்கரித்து வைக்கப்பட்டு இருந்தது. மாநில தலைவர் எல்.முருகன் தலைமையில் பாரதியாரின் உருவ படத்துக்கு மலர் தூவி மரியாதை செலுத்தும் நிகழ்ச்சி நடைபெற்றது. இதில், மூத்த தலைவர் இல.கணேசன், அமைப்பு பொதுச்செயலாளர் கேசவ விநாயகம், பொதுச்செயலாளர்கள் கே.டி.ராகவன், கரு.நாகராஜன் மற்றும் நடிகை குஷ்பு, மாதவி பாஸ்கர் உள்பட ஏராளமானோர் கலந்து கொண்டனர்.

மேலும், எல்.முருகன் முன்னிலையில், முன்னாள் அமைச்சர் பரிதி இளம்வழுதியின் மகன் இந்திரஜித் இளம்வழுதி, ஓய்வுபெற்ற ஐ.ஜி. அறிவுச்செல்வம், சென்னை கூட்டுறவு வங்கி முன்னாள் தலைவர் கிரிநாத், சினிமா இயக்குனர் கோதண்டராமன் உள்பட பலர் பா.ஜ.க.வில் இணைந்தனர்.

முன்னதாக, எல்.முருகன் நிருபர்களிடம் கூறியதாவது:-

விவசாயிகளின் விளை பொருட்களுக்கு அவர்களே விலை நிர்ணயம் செய்ய வேண்டும் என்ற விவசாயிகளின் நீண்டநாள் கோரிக்கை புதிய வேளாண் திருத்த சட்டங்களால் நிறைவேறி உள்ளது. விவசாயிகள் தாங்கள் உற்பத்தி செய்த பொருட்களை இடைத்தரகர்கள் இன்றி எங்கு வேண்டுமானாலும் விற்பனை செய்யும் நிலை ஏற்பட்டுள்ளது.

தி.மு.க.வின் தேர்தல் அறிக்கையில் கூறியதைத்தான் நாங்கள் நிறைவேற்றி இருக்கிறோம். காங்கிரஸ் ஆட்சியின் போது உணவுத்துறை மந்திரியாக இருந்த சரத்பவார் முதல்-மந்திரிகளுக்கு எழுதிய கடிதத்தில் இந்த சட்டம் பற்றி குறிப்பிட்டு இருந்தார். ஆனால், தற்போது தி.மு.க.வும், காங்கிரசும் இரட்டை வேடம் போடுகின்றன.

‘விவசாயிகளின் நண்பன் மோடி’ என்ற இயக்கத்தை தொடங்கி அதன் மூலம் வேளாண் சட்டங்களை விவசாயிகளிடம் எடுத்து செல்ல உள்ளோம். இதற்காக ஆயிரம் கூட்டங்கள் நடத்த உள்ளோம். இதில் மத்திய மந்திரிகள் கலந்து கொள்ள உள்ளனர். வேளாண் சட்டங்கள் விவசாயிகளுக்கு பாதுகாப்பானது என்று தமிழக விவசாயிகளுக்கு தெரிந்து உள்ளதால் தான் தமிழகத்தில் விவசாயிகளின் முழு அடைப்பு போராட்டம் தோல்வியில் முடிந்தது.

பா.ஜ.க. தேசிய தலைவர் ஜே.பி.நட்டா வேல் யாத்திரை நிறைவு நாள் நிகழ்ச்சியில் கலந்து கொள்வதாக இருந்தது. ஆனால், அவர் வரமுடியவில்லை. இந்தநிலையில், வருகிற 30, 31 மற்றும் ஜனவரி 1-ந் தேதிகளில் ஜே.பி.நட்டா தமிழகம் மற்றும் புதுச்சேரிக்கு வருகை தர உள்ளார்.

இவ்வாறு அவர் கூறினார்.

மேலும் செய்திகள்